மோடி இராமேஸ்வரத்தில் போட்டியிடுகிறார்..?

மோடி இராமேஸ்வரத்தில் போட்டியிடுகிறார்..?
X

பிரதமர் மோடி (கோப்பு படம்)

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடப்போகிறார் என்பதைவிட போட்டியிடவேண்டும் என்று தமிழகத்தின் வளர்ச்சி என்ற அடிப்படையில் வலியுறுத்தப்படுகிறது.

2014 ல் மோடி குஜராத் தவிர இரண்டாவது தொகுதியாக இன்னொரு தொகுதியில் போட்டியிட்டால், அதற்காக அவர் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டி வரும். அவரின் நாடு தழுவிய பிரசாரம் தடைபடும். மேலும் குஜராத்தில் வெற்றி பெற்றாலும், காசியில் தோற்றால் ஒரு பிரதம வேட்பாளருக்கு பெரும் சரிவை மற்ற கட்சிகளிடம் இருந்தல்ல, உள்கட்சியிலேயே, ஒரு எதிர்ப்பை ஏற்படுத்தி விடும் என்பது அறிந்ததே. அப்போது அந்த முடிவு ஆபத்தானதாக பார்க்கப்பட்டது.

ஆனாலும் RSS இன் திட்டப்படி உத்திரபிரதேசத்தில் தனது இரண்டாவது தொகுதியாக காசியை தேர்ந்தெடுத்தார். அன்றைய சூழலில், உபி என்பது மத்திய அரசுக்கு மிக முக்கியமானது. உபியில் ஒரு நல்ல வெற்றி இல்லாமல் ஒரு கட்சி மத்தியில் நிலையான ஆட்சி அமைப்பது கடினம். அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, மாநிலத்திலும் பாஜக முழு வெற்றி பெற்றால் தான் அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் மோடி ரிஸ்க் எடுத்து இரண்டாவது தொகுதியாக காசியிலும் நிறுத்தப்பட்டார்.

அதற்கு இன்னொரு காரணம், மோடி அங்கே நிற்காமல் இருந்திருந்தால், அந்த மாநிலம் என்பது பாஜகவிற்கு அன்னியமாகவே போய், பிரதமரும் அன்னியராகவே இன்று வரை பார்க்கப்பட்டிருப்பார். இப்போது அகிலேஷ் யாதவ் பதவியில் இருந்திருந்தால், மாற்று கட்சி என்ற ஒன்று அங்கே தடம் பதித்து, அதன் தலைமையில் இந்திய அளவில் பாஜகவிற்கு வலிமையான ஒரு மாற்று ஏற்பட்டிருக்கலாம், அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் அதற்கான சாத்தியங்களை மோடியின் காசி வெற்றி மூலம் எதிர்கட்சிகளின் வெற்றியை நிறுத்தி வைக்க இன்றுவரை உதவுகிறது என்பதை நாம் கவனிக்கத் தவறி விட்டோம்.

அதிர்ஷ்டவசமாக யோகி அங்கே எழுந்தார். அதன் மூலம் உபியில் பாஜக இன்று பலமாக இருக்கிறது. அங்கே இருந்த ரவுடிகளின், மத தீவிரவாதத்தின் அட்டகாசம் கட்டுப்படுத்தப் பட்டபோது அங்கே மட்டுமல்ல, அண்டை மாநிலங்களிலும் ரவுடிகள், மதவாதிகளின் அட்டகாசம் வெகுவாக குறைந்தது.

இன்று அதே பிரச்னை தமிழகத்திலும் உள்ளது. ஆனால் வேறு வடிவில். இன்றும் தமிழகத்தில் எதிர்மறை எண்ணம் என்பது நீறுபூர்த்த நெருப்பாக உள்ளது. எப்போது மத்திய அரசு பலவீனப்படுகிறதோ, அப்போது மீண்டும் எதிர்மறை எண்ணம் தலை தூக்கும். இன்றும் சீனாவின் தொடர்புகள் கேரளாவில் இருப்பதை விட அதிகமாக தமிழகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியொரு நிலை வரும் போது, ஏற்படும் விளைவுகளை தடுக்க வேண்டுமெனில், தமிழகத்தில் பாஜக வெற்றிபெற்று தேசிய நீரோட்டத்தில் சேர, பாஜகவின் வெற்றி இங்கே, இப்போது மிக அவசியம்.

அது மாற தேசிய கட்சிகளில் ஒன்று ஆட்சி அமைக்க வேண்டும். அதை காங்கிரஸ் செய்ய முடியாதபோது, அதுவும் கூட பிரிவினையை தூண்டும் கட்சியாக மாறிய பின்பு, பாஜகதான் தீர்வாக வேண்டும். அது கூடியவிரைவில் நடக்க வேண்டும்.

ஏனெனில், மோடி இருக்கும்போது நடந்தால் அதை சாத்தியமாக்குவது கொஞ்சம் எளிது. மோடி 2026 ல் ஓய்வு பெறுகிறார். இன்று கூட தமிழக வாக்காளர்கள், பாஜகவை ஆதரிக்கக் காரணம் மோடி. ஆம் இன்று 69% மோடியை விரும்புகிறார்கள். ஆனால் பாஜக ஆதரவு என்பது இன்னும் நான்கில் ஒரு பகுதிகூட இல்லை என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் மொழி ரீதியாக ஒரு கடும் வெறுப்பை எப்போதும் உருவாக்கலாம். இப்போது மோடி என்பவரின் தாய்மொழியே ஹிந்தியல்ல. ஆனால் நாளை யோகியின் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் போது, தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களில் பாஜகவிற்கு ஒரு சரிவு கண்டிப்பாக ஏற்படும். ஆம் பாஜக இன்று பல மாநிலங்களில் வெற்றியின் உச்சத்தில் இருக்கிறது. மேலே வளர வாய்ப்பில்லாதபோது, ஒரு சிறு சரிவுகூட சரிவுதான்.

அப்போது அந்த சரிவை சரிகட்ட, தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் மாற்றம் என்பது, கேரளாவிலும், ஆந்திராவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அப்படியெனில் அப்போது மோடி இல்லாத ஒரு வெற்றிடத்தில், பாஜகவை தமிழகத்தில் ஆட்சிக்கு கொண்டு வருவது என்பது கடினம். அந்த பொறுப்பு முழுவதும் அண்ணாமலை மீது வந்து விடும். எனவே இங்கே ஒரு ரிஸ்க் எடுத்தாக வேண்டும்!? அந்த ரிஸ்க், மோடி என்ற துருப்பு சீட்டு. அதை நீண்டகால நோக்கத்தில் பயன்படுத்தியாக வேண்டும்.

மோடி இராமேஸ்வரத்தில் (இராமநாதபுரத்தில்) போட்டியிட்டால், இன்னும் கூட பிரதமரை வேறுபடுத்தி பார்க்கிற ஒரு எண்ணம் மாற்றம் சுருங்கும். அதன் தாக்கம் அந்த தொகுதியில் மட்டுமல்ல, உபியில் ஏற்பட்டதுபோல தமிழகமெங்கும் பெரியளவில் பார்க்க முடியும். அது தெற்கு, மேற்கு, டெல்டா, சென்னையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். அவர் தோற்றுவிடுவாரோ?

இன்று கூட திமுகவிற்கு சாதகமில்லாத கொங்கு பகுதியில் ஸ்டாலின் நின்றால் வெற்றி பெறமுடியும். ஏனெனில் ஒரு மாநில முதல்வர் போட்டியிடும் தொகுதியில் இருக்கும் மக்கள், முதல்வர் வேட்பாளர் என்று, கட்சி தாண்டி பார்ப்பார்கள். தமது தொகுதிக்கு நல்லது நடக்கும் என்று ஓட்டுப்போடுவார்கள். அதுபோல, மோடி போட்டியிட்டால் அது நிகழும். கட்சி தாண்டி மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் ஓட்டுக்களில் ஒரு கணிசமான பகுதி கூட மோடிக்கு கண்டிப்பாக விழும்.

அதுமட்டுமல்ல, இராமநாதபுர மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில், அது மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். அது தமிழகத்திற்கு மிகவும் நல்லது. பிரதமர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் கூடுதல் கவனமும், நிதியும் மாநில அரசுக்கு கிடைக்கும் என்பதால் மோடியின் வெற்றி எளிதாகும்.

மேலும், பாஜக தொண்டர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் விரியும். உபியில் ஏற்பட்டது போல. அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பு என்பது முதல், கட்சிக்குள் ஒருங்கிணைந்த கட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பும் கிடைக்கும். ஏற்கனவே அண்ணாமலை அதற்கான அடித்தளத்தை "என் மண் என் மக்கள்" மூலம் பரவலாக்கிய ஒரு சாதகமான சூழலில், மோடியின் போட்டியால் அதை விரிவாக்குவது எளிதாகிவிடும்.

அது மட்டுமல்ல, இங்கே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டபின், அவரின் தாக்கம் மிகப்பரவலாகிவிடும். அடுத்த 2 ஆண்டுகளில் அந்த தொகுதி சந்திக்க போகும் மாற்றங்களை வைத்து, பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த வளர்ச்சியை தமிழகமெங்கும் விரிவாக்க முடியும் என்பது, அவரின் கடைசி தேர்தல் பிரசாரம் தமிழக சட்டசபைக்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அப்போது பாஜகவை ஏற்கும் மனப்பான்மை வெற்றிக்கான தூரத்திற்கு விரிவடையலாம்.

மோடிக்கு பின்னால் வரும் யோகியால், மோடிபோல ஒரு PAN India Movement ஐ கொடுக்க முடியுமா?

கண்டிப்பாக மோடியின் கரிஷ்மா அவருக்கு இல்லை. ஆனால் அவரின் திறமை வேறுபட்டது. அவர் அடித்தாடக்கூடியவர். மோடி ஆட்சி அமைத்து 10 ஆவது ஆண்டு நடக்கும் போது, இன்றுவரை ஒருவர் கூட பாஜக அரசு கொண்டு வந்த வழக்கில் ஊழல்வாதிகள் தண்டிக்கப் பட்டுள்ளார்களா?

இல்லை, அது அடுத்த மோடியின் ஆட்சியிலும் நடக்காது. ஆனால் யோகி, அதைத்தான் பிரதானமாக கையில் எடுப்பார். ஊழல்வாதிகள் பலரும் தண்டிக்கப்படுவார்கள். இப்போது ஒரு பக்கம் மோடி அரசு அவர்களை தண்டிக்காது என்ற மன நிலையில், ஊழல் செய்ய அனுமதித்து, அந்த விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, ஊழலுக்கான சட்டதிட்டங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அதில் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்ட பின்,ஊழல்வாதிகள் எங்கே இருப்பார்கள்? ஜெயிலில்தானே!? அந்த சூழலில் யோகியின் அடுத்த வெற்றி என்பது மாறுபட்டதாக இருக்கும். ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்படும் சூழலில், எதிர்கட்சிகள் இருந்தும் இல்லாமலேயே போய்விடும். அது மற்ற மாநிலத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் பொருந்தும்.

அப்போது பாதிக்கப்படுவது திமுக மட்டுமல்ல, அதிமுகவுமே. அந்த சூழல் அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும் 2026 எளிதான சூழலை மட்டுமல்ல. வெற்றியை கொடுக்கக்கூடியதே!

எனவே, இந்த 2024 தேர்தல் என்பது, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக அவசியமானது. அதை செய்து முடிக்க வேண்டுமெனில் பாஜக 350+ இடங்களில் வெற்றி பெற வேண்டும், தமிழகத்தில் ஒரு பெரிய வெற்றியை பெறாத சூழலில், அது சாத்தியமல்ல, சத்தியமுமல்ல!

மேலும் அடுத்த மோடியின் ஆட்சியில் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மட்டுமல்ல, மிக முக்கியமான பொது சிவில் சட்டம், நீதிமன்ற கொலீஜியத்தில் ஏற்படும் மாற்றம், One Nation One Election (அது படிப்படியாக நிகழும்), காஷ்மீர் முழுவதுமாக இணைப்பு, இந்திய ஒன்றிய அரசு (உடைந்த பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், நேபாள், பூடான் போன்றவை ஐரோப்பிய யூனியன் போல இந்திய யூனியன்) போன்றவை நிகழலாம்.

குஜராத், உபி உயர்ந்தது போல, தமிழகம் மீண்டும் உயர, அவரது கால் புண்ணிய பூமியான காசிக்கு அடுத்து இராமேஸ்வரத்திலும் படவேண்டும், தமிழகம் யோகிபோல, அண்ணாமலை மூலம் உயரவேண்டும்.

அது மிக, மிக அவசியம், ஏனெனில், தமிழகம் உயர்ந்தால், இந்தியாவின் GDP மிகப்பெரிய அளவில் உயரும். அப்போதுதான், நம்மால் சீனாவை முந்த முடியும், அது தமிழகத்தின் பங்களிப்பில்லாமல் நடக்காது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!