பண்டோரா பேப்பரால் பாதிக்கப்பட்ட சச்சின், அனில் அம்பானி: ரகசியங்கள் கசிவு..!

பண்டோரா பேப்பரால் பாதிக்கப்பட்ட சச்சின், அனில் அம்பானி: ரகசியங்கள் கசிவு..!
X

சச்சின் மற்றும் அனில் அம்பானி 

பண்டோரா பேப்பர் வெளியிட்டுள்ள ரகசிய சொத்துக்கள் அடங்கிய விவரங்களை விசாரிக்க இந்திய அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

தற்போது நாடுமுழுவதும் பேசப்படும் ஒரே பரபரப்பான விஷயம், பண்டோரா பேப்பர் விவகாரம். இந்த பண்டோரா பேப்பரில் சச்சின் பெயரும் அடிபட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த விமர்சனங்களுக்குள்ளும் சிக்காமல் இருந்து வந்த சச்சின், பண்டோராவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரகசியமாக மேற்கொள்ளப்படும் கடல்கடந்த தொழில், முதலீடுகள், சொத்துக்கள் போன்றவைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது பண்டோரா பேப்பர்ஸ். இந்த பண்டோரா பேப்பர் கசிவில் தொழில் அதிபர் அனில் அம்பானியும் ஒருவர்.

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து இந்திய அரசு பல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இதில் வெளியாகியுள்ளன.

இந்த விசாரணையை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் (சிபிடிடி) தலைவர் ஜேபி மொஹபத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணைக் குழுவை வழிநடத்துவார். நேரடி வரிகள் துறை தவிர, அமலாக்க இயக்குநரகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நுண்ணறிவு பிரிவு ஆகிய அமைப்புகளும் இந்த விசாரணையை மேற்கொள்ளும்.

ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத் தலைவர் அனில் அம்பானியும் அவரது பிரதிநிதிகளும் குறைந்தது 18 வெளிநாட்டு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருப்பதாக பண்டோரா பேப்பரில் கசிந்த பதிவுகள் கூறுகின்றன. 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் நிறுவப்பட்ட இந்த நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் கடன் வாங்கியுள்ளன. குறைந்தது 1.3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

இது குறித்து அனில் அம்பானியிடமிருந்து உடனடி பதில் இல்லை. ஆனால் அவர் சார்பாக ஒரு வழக்கறிஞர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பதிலில், எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் வரி செலுத்தும் குடிமக்கள். சட்டப்படி தேவையான அனைத்தையும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் நேர்மையானவராகக் கருதப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரும் பண்டோரா பேப்பர்களில் வெளிவந்துள்ளது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. என்னது சச்சினா? என்று கேட்கும் அளவுக்கு அவர் நல்ல பிள்ளையாக கருதப்பட்டார்.

அவர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2016-ல் துவங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் அவரது மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என்று கூறப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் சிஐஓ இந்த முதலீடுகள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும். அவைகள் சரியானவை என்று ஊடகங்களில் ஒரு அறிக்கையை அளித்துள்ளார்.

பண்டோரா பேப்பர், மறைக்கப்பட்ட சுமார் 12 மில்லியன் சொத்துக்களின் ஆவணங்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!