மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்..! உபி-யில் நடந்தது என்ன?
முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் என்ற இடத்தில் மத பிரார்த்தனை கூட்டம் (சத்சங்) ஒன்றுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். தனியார் அமைப்பு ஒன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக இந்த மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் ஏறிச்சென்றதில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் டெம்போ மற்றும் பஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்களும் கதறி அழுதபடி வந்தனர்.
ஹத்ராஸ் மருத்துவமனைக்கு 60 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டதாக மாவட்ட நீதிபதி ஆசிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தவிர எடாஹ் மாவட்ட மருத்துவமனைக்கும் 27 பேரின் உடல்கள் வந்துள்ளதாக அரசு மருத்துவமனை டாக்டர் உமேஷ் குமார் தெரிவித்தார். அவர்களில் 25 பேர் பெண்கள், இருவர் ஆண்கள். இன்னும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக நீதிபதி ஆசிஷ் குமார் கூறுகையில், ``ஹத்ராஸ் அருகில் கிராமத்தில் தனியார் அமைப்பு இந்த மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதற்கு அனுமதியும் பெறப்பட்டு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் செய்திருந்தது. ஹத்ராஸ் அரசு மருத்துவமனைக்கு 50 முதல் 60 பேரின் உடல்கள் வந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்'' என்றார். எடாஹ் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் இது குறித்து கூறுகையில், ``உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள். மருத்துவமனைக்கு வந்த 27 பேரில் 23 பேர் பெண்கள் ஆவர்''என்றார்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், ``கூட்ட நெருக்கடி ஏற்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவ பகுதிக்கு இரு அமைச்சர்கள் நேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மாநில தலைமை செயலாளர், டி.ஜி.பி ஆகியோரும் விரைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் டி.எஸ்.பி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் இறந்தவர்கள் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியில் நுாற்றி பதினாறு பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதால் உத்திரபிரததேசம் முழுவதும் அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu