மஹாராஷ்டிராவில் அதிரடி அரசியல் மாற்றம்: துணை முதல்வர் ஆனார் அஜித் பவார்
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் அஜித் பவார்
மஹாராஷ்டிரா போல் எந்த இந்திய மாநிலத்திலும் திடீர் அரசியல் மாற்றங்கள் நிலவவில்லை. அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த மாநிலத்தில் ஒரு எதிர்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ., வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார்.
சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்தார். அப்போது அஜித் பவாருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நடந்து வந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு 26எம்ஏல்களுடன் ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தார். தனது ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் கவர்னரை சந்தித்தார்.
2019 ம் ஆண்டு பா.ஜ.,வின் பட்னாவிசுடன் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 8 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார்.
கவர்னர் மாளிகையில் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து அவரது ஆதரவு 8 எம்எல்ஏக்களும் அமைச்சராக பதவியேற்றனர். எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென இந்த அரசியல் மாற்றம் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பல்வேறு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதாவின் 'வாஷிங் மெஷின்' தனது வேலையை தொடங்கி விட்டது போலும். வாஷிங் மெஷின் அழுக்கு துணிகளை சுத்தமாக்குவது போல், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திப்பவர்கள், மராட்டிய மாநில பா.ஜனதா கூட்டணி அரசில் புதிதாக இணைந்தவுடன், நற்சான்றிதழ் பெற்று விட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்காள மாநில தலைவருமான பாபுல் சுப்ரியோ கூறுகையில், ழலுக்காக அமலாக்கத்துறையின் விசாரணையில் இருக்கும் தலைவர்கள், தங்கள் கறையையும், களங்கத்தையும் போக்க பா.ஜனதா தயாரித்த வாஷிங் மெஷினில் போடப்பட்டுள்ளனர். இனிமேல், ஊழலை எதிர்ப்பதாக பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் பேசக்கூடாது என கூறியுள்ளார்
முன்னாள் மத்திய மந்திரியும், சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் கூறுகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது கூறிய 'ஜனநாயகத்தின் தாய்' என்பது இதுதான் போலும் என்று அவர் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கூறுகையில், மராட்டிய மாநிலத்தில் மக்கள் தீர்ப்பை மீண்டும் குழிதோண்டி புதைத்திருக்கும் பா.ஜனதாவை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி, தங்கள் அவமானகரமான செயல்களுக்கு தேசிய கீதத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். ஒருபக்கம், ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில், அரசியல் எதிரிகளை பா.ஜனதா கைது செய்கிறது. மற்றொரு பக்கம், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பா.ஜனதாவின் அதிகார வெறியை தணிக்க மக்கள் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu