இனி மின்கட்டணம் எப்படி.. மத்திய அரசின் புதிய பிளான்
பைல் படம்
மின்சார(நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் மூலம், டைம் ஆஃப் டே ( Time of Day Tariff -டிஓடி) மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய முறையில், ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், புதிய நடைமுறையின் கீழ், மின்சாரத்திற்கு செலுத்தும் கட்டணம் நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும். அதன்படி, மின்சாரத்திற்கான உச்ச தேவை இருக்கும் நேரங்களில் (Peak Hours - உதாரணமாக, காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) மின் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.
அதே சமயம், சூரியஒளி கிடைக்கும் சாதாரண நேரங்களில் (solar Hours) தற்போது வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக இருக்கும். இந்த சூரியஒளி கிடைக்கக் கூடிய நேரங்கள் எது என்பதை அந்தந்த மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தங்களது புவியியல் அமைப்புக்கு ஏற்ப தீர்மானித்து கொள்ளும்.
2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வரும். 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடனேயே, ஸ்மார்ட் மீட்டர் நுகர்வோருக்கு இந்த கட்டணம் அமலுக்கு வரும்
தேவை ஏன்? சூரிய சக்தி மின்சாரம் மலிவானது என்பதால், சூரிய நேரத்தில் கட்டணம் குறைவாக இருக்கும். எனவே நுகர்வோருக்கு குறைவான மின்கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதேசமயம், சூரிய சக்தி அல்லாத நேரங்களில் அனல் மற்றும் நீர் மின்சாரம் மற்றும் எரிவாயு அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் செலவுகள் சூரிய சக்தி மின்சாரத்தை விட அதிகமாகும். எனவே, டைம் ஆஃப் டே கட்டண முறையின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
இதன்மூலம், நுகர்வோர் சோலார் நேரங்களில் அதிக நடவடிக்கைகளைத் திட்டமிடலாம். மேலும் , உச்ச நேரங்களில் மின் கட்டணங்களை குறைக்கும் வகையில் தங்கள் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை திட்டமிட்டு மின்கட்டணங்களை குறைக்கலாம்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பெரிய வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு டிஓடி கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது, ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம், அனைத்து நுகர்வோர் மட்டத்தில் இந்த புதிய கட்டணக் கொள்கையை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu