ஒரு துளி மழை கூட இல்லை...கொதிக்கிறது வயநாடு
இயற்கை எழில் நிறைந்த வயநாடு வனத்தின் ஒரு சிறு பகுதி.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பெய்த ஓரிரு நாள் சாரல் மழை கூட வனப்பு மிகுந்த வயநாடு மாவட்டத்தில் பெய்யவில்லை. இடுக்கி மாவட்டத்திற்கு அடுத்து சுற்றுலா மூலம் மிகப் பெரிய வருவாயை கேரள மாநில அரசுக்கு ஈட்டிக் கொடுக்கும் வயநாடு மாவட்டத்தில், இயற்கை அழகுக்கும், எழிலுக்கும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லை. அப்படி இயற்கை செழுமை மிகுந்த வயநாடு மாவட்டம், தற்போது வெப்பத்தில் தகிக்கிறது.
ஜூன் மாத இறுதியில் கூட வயநாட்டில் மழை பெய்யவில்லை என்பது கவலையான விஷயம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வயநாடு மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் மிகக் குறைந்த மழை பதிவாகி உள்ளது. இப்போது விவசாய நாட்காட்டி கூறி வரும் பலாபலன்கள் பொய்த்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மழையில்லாததால் பருவமழைக்கால சுற்றுலாவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் ஜீன் மாத மழை நிலவரம் ஆண்டு வாரியாக வெளியாகி உள்ளது. 2020 - 184 மி.மீ., 2021 - 325 மி.மீ., 2022 - 73 மி.மீ., 2023 - 71 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இடைவிடாமல் மழை பெய்ய வேண்டிய வயநாட்டில் வெப்பம் நிலவுகிறது. வயநாடு மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் சராசரியாக 280 மி.மீ., மழை பெய்யும். ஆனால் இதுவரை 72 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. கடந்த ஆண்டும் இதே நிலை தான். மாவட்டத்தில் 80 சதவீதத்துக்கும் மேல் மழை பெய்யாதது வயநாடு மாவட்டத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு மழை பலமாக பெய்தால் மட்டுமே பெரியாறு அணை நிரம்பும். பெரியாறு அணைப்பகுதியிலும் மழை சுத்தமாக இல்லை. அணை நீர் மட்டம் 115 அடியை நோக்கி சரிந்து வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம், மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பருவமழையின் மாற்றத்தின் பாதிப்பு வயநாடு மாவட்டத்தில் தெளிவாக தெரிகிறது. இயற்கை வளம் நிறைந்த வயநாடு மாவட்டம் முழுவதும் கிணற்றில் நீர்மட்டம் உயராமல் இருப்பது சவாலாக உள்ளது. ஆறுகளில் ஓடும் நீரோட்டமும் குறைந்துள்ளது. மனித மனங்களின் சொகுசு வாழ்க்கையால் இயற்கை சின்னா பின்னப்பட்டு கிடக்கிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் பெரியாறு அணையும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலை நீடித்தால் வயநாடு மாவட்டம் மட்டுமல்ல... தமிழகத்தின் பல மாவட்டங்களும் பெரும் பாதிப்பில் சிக்கும். இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu