இன்று முதல் புதிய மூன்று குற்றவியல் திருத்த சட்டங்கள் அமல்

இன்று முதல் புதிய மூன்று குற்றவியல் திருத்த சட்டங்கள் அமல்
X

இன்று முதல் புதிய மூன்று குற்றவியல் திருத்த சட்டங்கள் அமல் 

புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களில் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாகப்பட்டுள்ளன.

இன்று ஜூலை 1 முதல் நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகின்றது அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி (IPC) குற்றவியல் நடைமுறை சட்டம் சி ஆர் பி சி , (CRPC) இந்திய சாட்சியங்கள் சட்டம் (IEC) உட்பட ஆங்கிலேயர் கால சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களில் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாகப்பட்டுள்ளன.

பாரதிய நியாய சன்ஹிதா 2023

இந்திய குற்றவியல் சட்டம் 1860க்கு மாற்றான இந்த புதிய சட்டத்தில் தேசத்துரோகம் என்பது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. முதல் முறையாக தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் வருமானம் மற்றும் சொத்துக்களை இணைக்கும் புதிய வழிமுறை சேர்க்கப்பட்டுள்ளது..

பாரதிய சாக்ஷியா 2023

இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இதன்படி நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும். வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம் பெறும்.

புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பு அம்சங்கள்

புதிய சட்டங்களின் கீழ், இப்போது எந்தவொரு நபரும் காவல் நிலையத்திற்குச் செல்லாமல் மின்னணு தகவல் தொடர்பு மூலம் புகார் செய்யலாம். இதன் மூலம் வழக்கு பதிவு செய்வது எளிதாக இருப்பதோடு, காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தையை வாங்குவதும் விற்பதும் பெரும் குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது. மைனரை கூட்டு பலாத்காரம் செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்

ஜீரோ எஃப்ஐஆர் மூலம் எந்த ஒரு நபரும், அதன் அதிகார எல்லைக்குள் குற்றம் நடக்காவிட்டாலும், எந்த காவல் நிலையத்திலும் இப்போது எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இதன் மூலம் சட்ட நடவடிக்கைகள் தொடங்குவதில் ஏற்படும் காலதாமதம் நீங்கி, உடனடியாக வழக்கு பதிவு செய்ய முடியும்.

மேலும், காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் கைது விவரங்கள் எளிதில் கிடைக்கும். இதன் மூலம், கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முக்கிய தகவல்களை எளிதில் பெற முடியும்.

சாட்சிகளின் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்வதற்கும், சட்டச் செயல்பாட்டின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அனைத்து மாநில அரசுகளும் சாட்சி பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதைப் புதிய சட்டங்கள் கட்டாயமாக்குகின்றன.

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!