நவரத்தினக்கல் உறைய வைக்கும் உண்மை: உலக சாம்ராஜ்ஜியத்தில் 80% இந்தியர்கள், அதில் 50% தமிழர்கள்

நவரத்தினக்கல் உறைய வைக்கும் உண்மை: உலக சாம்ராஜ்ஜியத்தில் 80% இந்தியர்கள், அதில் 50% தமிழர்கள்
X
பல லட்சம் கோடி புரளும் வியாபாரத்தில் வரும் பணம், பெரும் பகுதி தீவிரவாத செயல்களுக்கா? கண் வைக்குமா உளவுத்துறை..

உலகின் தங்க மார்க்கெட் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் கல் மார்க்கெட் பற்றி ஒரு சிலருக்கே தெரியும். காரணம் கல் மார்க்கெட் இந்தியாவில் (குஜராத், ராஜஸ்தான், ஓரிசா ஆகிய மூன்று மாநிலங்களை தவிர்த்து) முழுக்க நிழல் உலகில் நடைபெறும் தொழிலாக மாறி உள்ளது. இது பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்களை பார்க்கலாம்..

கல் என்றாலே நம்மூரி்ல் நவரத்தினங்களை குறிக்கும். அதாவது கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம் ஆகியவற்றை குறிக்கும். ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய உச்சபட்ச மதிப்பு 5 ஆயிரம் ரூபாய். இதனால் உலகமே தங்கத்தை தான் உற்று நோக்குகிறது. ஆனால் ஒரு கிராம் ஒரிஜனல் கல் விலை குறைந்தபட்சமே 6 லட்சம் ரூபாயி்ல் தொடங்கும். 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை போகும். கல்லின் தரத்தை பொறுத்து அதன் விலையும் பல மடங்கு அதிகரிக்கும்.

இதில் உலகமெங்கும் கடலுக்குள் கிடைப்பது முத்து. அதாவது கடல் வாழ் உயிரினங்களான சிப்பிக்குள் இருந்து கிடைப்பது முத்து. இந்த முத்தெடுக்கும் தொழில் நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் இருந்தது என்பது வரலாறு தெரிந்த அத்தனை பேருக்கும் தெரியும். நவரத்தினங்களில் அடுத்த எட்டு வகை கற்களும் நிலத்தில் தான் கிடைக்கின்றன. வைரக்கற்கள் அதிகம் விளையும் நாடு தென்ஆப்பிரிக்கா. இந்தியாவில் ஆந்திராவிலும் (கோல்கண்டா) ஒரிசாவிலும் வைர சுரங்கங்கள் உள்ளன. இலங்கையில் ரத்தினங்கள் அதிகம் கிடைக்கும். நவரத்தினகிரி என்ற நதியே இலங்கையில் ஓடுகிறது. இந்தநதியின் மேற்பரப்பில் கற்கள் கிடைக்கும். இங்கு கல் சட்டபூர்வமான தொழிலாக உள்ளது. நவரத்தினங்கள் 9 வகைகளாக பிரிக்கப்பட்டாலும், இவற்றின் உப வகைகள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு உண்டு. உலகில் 90 சதவீத கிறிஸ்தவ மற்றும் புத்தமத நாடுகளில் தங்க நகைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. இங்கெல்லாம் கல் விற்பனை தான் கொடி கட்டிப்பறக்கும்.

கல் விற்பனையில் கொடி கட்டிப்பறக்கும் உலகின் தலைநகரம் ஹாங்ஹாங். அடுத்தது பாங்காங்க், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளிலும் கல் விற்பனை மார்க்கெட்டுகள் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள இந்த கல் மார்க்கெட்டுகளி்ல் கடை வைத்திருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது தான் புருவத்தை உயர்த்த வைக்கும் ஆச்சர்யமான விஷயம்.

அதாவது கல் விற்பனை சட்டப்பூர்வமாக இல்லாத ஒரு நாட்டில் வசிக்கும் மக்கள் உலகின் கல் விற்பனையில் 80 சதவீதம் இடத்தை பிடித்துள்ளார்கள். இந்த 80 சதவீதத்தில் 50 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றால் நிழல் உலகம் எவ்வளவு வலிமையாக இயங்குகிறது என்பதை சற்று உற்று கவனியுங்கள். அதாவது இந்தியாவில் கல் விற்பனை மேலே குறிப்பிட்டபடி குஜராத், ராஜஸ்தான், ஒரிசா தவிர மற்ற மாநிலங்களில் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், உலகின் தரமான நம்பர் ஒன் கல் உற்பத்தியில் இந்தியாவிற்கு இணை இந்தியா தான். வேறு நாடுகளை ஒப்பிடவே முடியாது. ஆமாம் இந்தியாவில் நவரத்தின கற்கள் அத்தனையும் ஒரிஜனலாக கிடைக்கின்றன. (சீனா கல் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் டூப்ளிகேட் மார்க்கெட். அங்கிருந்து செயற்கை கல் தயாரிக்கப்பட்டு ஆண்டு தோறும் பல லட்சம் கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவின் வர்த்தக வலிமைக்கு இந்த போலிக்கல் வியாபாரமும் ஒரு காரணம். அப்படியானால் ஒரிஜனலான நமக்கு ஆண்டுக்கு எத்தனை லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டு பாருங்கள்).

கிறிஸ்தவ மக்கள் அதிகம் விரும்பி அணியும் அக்குமெரின் கல் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் கிடைக்கின்றன. ரூபி, மாணிக்கம், அக்குமெரின், எமரால்டு, சபையர், நீலம் (காஷ்மீர் நீலம் உலகின் ஸ்பெஷல்) என இந்தியாவில் கிடைக்கும் அத்தனையும் பல லட்சம் கோடி மதிப்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் மேகமலையி்ல் அக்குமெரின் இருப்பது எல்லோருக்கும் தெரியும். (இப்போதும் கூட இந்த கடத்தல் திருட்டுத்தனமாக நடப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் உலகிறது.)

மதுரை மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்து (பெயர் வேண்டாமே) கல் குவாரியில் உடைக்கும் போதே, நீலம், பச்சை கலர் அக்குமெரின் கற்கள் வெடித்து சிதறியது. அவற்றை விற்பனை செய்து பல பேர் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகி விட்டனர். அதேபோல், உலக மார்க்கெட்டில் விற்கப்படும் அத்தனை கற்களும் இந்தியாவில் விளைகின்றன. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகின்றன. கடத்தப்படுகின்றன. ஐந்து பவுன் தங்க நகை வைக்கும் ஒரு சிறிய டப்பாவில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கற்களை அடக்கி விடலாம் என்றால் இதனை கடத்திச் செல்வது எவ்வளவு எளிது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு வந்தால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் கல் விற்பனைக்கும் அரசு அங்கீகாரம் கிடைத்து விடும். இதுமட்டும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக மாறினால் அரசுக்கு இதன் மூலம் மட்டும் பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். ஜி.எஸ்.டி., வருவாயினையே போல் இந்த வருவாயும் அரசுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது நிழல் உலகம் இந்த கல் விற்பனை மீது முழு ஆளுமை செலுத்துவதால், இதில் வரும் பணத்தின் ஒரு பகுதி தீவிரவாத செயல்களுக்கு சென்று விடுகிறது என்ற ஒரு பதட்டமான தகவலும் கசிகிறது. இதனால் தான் உளவுத்துறை இந்த விஷயத்தில் அதிதீவிர கவனம் செலுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க.,வினரே கூறுகின்றனர். நிச்சயம் கல் விற்பனை ஒழுங்குபடுத்தப்பட்டு பகிரங்கமாக வெளி மார்க்கெட்டிற்கு வந்து விட்டால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் தீவிரவாதிகளுக்கு கிடைத்ததை போன்ற ஒரு பேரிடி விழுந்து விடும் எனவும் அவர்கள் திடமாக கூறுகின்றனர்.

உலகிலேயே கடினமான வனச்சட்டம் இந்திய வனச்சட்டம் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். இருப்பினும் இந்திய வனங்களில் இருந்து இவ்வளவு வளங்கள் திருடப்படுகின்றன. வனத்துறை இடங்களை தொடாமல், (இந்தியாவின் பரப்பில் 33 சதவீதம் வனநிலங்கள்) விளைநிலங்களில் கிடைக்கும் கற்களை சேகரித்து விற்றாலே பல நுாறு ஆண்டுகளுக்கு வர்த்தகம் புரிய முடியும். இதற்காக சில வெளிநாடுகளில் சிறிய அளவிலான ஸ்கேனர்களை பறக்கவிட்டு, (விசேஷ வீடுகளில் போட்டோ எடுப்பார்களே, அதே பாணியில்) நிலங்களை ஸ்கேன் செய்து கற்கள் இருக்கும் இடங்களை துல்லியமாக கண்டறிந்து எடுத்து விடலாம் எனவும் கல் வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே மத்திய அரசும், உளவுத்துறையும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் நாட்டுக்கும் நல்லது என இவர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.

Tags

Next Story