தியானத்தை இன்று நிறைவு செய்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் மற்றும் 11 எஸ்.பி.,க்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இன்று நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இதற்காக வாரணாசியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த மோடி, வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
பின்னர் ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகை ஹெலிபேடுக்கு மாலை 4.45 மணிக்கு வந்தார். அங்கிருந்து மோடி நேராக பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் மாலை 5.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.30க்கு காரில் கன்னியாகுமரி படகுத்துறை வந்து சேர்ந்தார். அங்கிருந்து படகில் 5.40 மணிக்கு விவேகானந்தர் நினைவிடம் சென்றடைந்தார். மாலை 5.45 மணி முதல் அவர் விவேகானந்தர் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டார்.
நேற்று காலை சூரிய வழிபாடு நடத்தினார். பின்னர் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார். முழு தியானத்தின் போதும், அவர் துளசி தண்ணீர் மட்டும் தான் குடித்தார். வேறு எதையும் பருகவில்லை. சாப்பிடவும் இல்லை.
பிரதமர் பயணத்தை முன்னிட்டு, தமிழக போலீசார் மட்டுமின்றி, மத்திய பாதுகாப்பு படையினரும் குமரிக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக கடலோர பாதுகாப்பு ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில், தென் மண்டல ஐ.ஜி கண்ணன், டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி சுந்தரவதனம் மற்றும் கடற்படை, எஸ்.பி.ஜி அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு பிரிவுகள், கன்னியாகுமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். ஹெலிபேடில் 3 அடுக்கு பாதுகாப்பும், விவேகானந்தர் மண்டபத்தில் 4 அடுக்கு பாதுகாப்பும், கடற்கரை மற்றும் படகு தளம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
மொத்தமாக 48 மணி நேரம் பிரதமர் இங்கு தங்குவதால், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 11 எஸ்.பிக்கள் மேற்பார்வையில், 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் வெளிமாவட்ட போலீசாரும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். கன்னியாகுமரி தங்கும் விடுதிகளில் போலீசார் சுற்றுலா பயணிகள் விவரங்களை பெற்று கண்காணித்து வருகின்றனர்.
கடற்கரைகளில் சாதாரண உடையிலும், போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுபோல், சின்னமுட்டம், கோவளம் போன்ற அருகில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலுக்குள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதால், தமிழக காவல்துறையினருக்கு இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடு முதல் அனுபவமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மறுநாள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது.
அமெரிக்க கடற்படையில் சீல் என்ற கமாண்டோ படை பிரிவு உள்ளது. இதற்கு இணையாக இந்திய கடற்படையிலும், மார்கோஸ் எனப்படும் சிறப்பு கமாண்டோக்கள் (கடல் செயல் வீரர் படை) உள்ளனர். 1987ம் ஆண்டு இந்த பிரிவு தொடங்கப்பட்டது. மார்கோஸ் வீரர்கள், கடலுக்கு அடியில் 24 மணி நேரமும் இருந்து கண்காணிப்பது உள்பட அதிதீவிர பாதுகாப்பு பயிற்சி பெற்றவர்கள். கார்கில் உள்பட பல போர்களில் இந்த வீரர்களின் பங்களிப்பு அதிகம். ஸ்கூபா டைவிங், கடல் கொள்ளையர் கண்காணிப்பு, பணய கைதிகள் மீட்பு, உளவு, தேடல், பயங்கரவாத எதிர்ப்பு என பலவகையான பயிற்சி பெற்ற இவர்களிடம் நவீன பாதுகாப்பு உபகரணங்களும் உண்டு. குமரியில் பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு இந்த மார்கோஸ் படை வீரர்கள் 30 பேர் வந்துள்ளனர். இவர்கள் தொடர்ச்சியாக அதிவேக படகுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மோடி வருகையை முன்னிட்டு, கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்காக கடற்படையினர், மத்திய துணை ராணுவ பிரிவான கடலோர காவல்படையினர், தமிழ்நாடு மரைன் போலீசார் ஆகியோர் கடலில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாகவே பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும் போது, அதன் அருகே உள்ள பகுதிகளில் கடலோர காவல் படையின் தீவிர கண்காணிப்புடன், போர்க்கப்பல்களும், அந்த கடல் பகுதிக்கு வந்து விடும். தற்போதும், போர்க்கப்பல்கள் குமரி கடல் பகுதியில் முகாமிட்டுள்ளன. இதுபோல் ஹெலிகாப்டர்கள் மூலமும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் கண்காணிப்பட்டு வருகிறது.
விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை முடித்ததும் பிரதமர் மோடி அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட்டிற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்கிறார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது இறுதிகட்ட பிரசாரம் நிறைவு பெற்ற பின்னர் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு சென்று பனிக்குகையில் 17 மணி நேரம் தியானம் செய்தார். பிரதமர் மோடிக்காக பல்வேறு வசதிகள் அங்கு செய்து தரப்பட்டது. இதேபோல், தற்போது விவேகானந்தர் மண்டபத்திலும் பிரதமர் மோடிக்காக சிறப்பு அறைகள் தயாரானது. அதில் ஒன்று பிரதமர் மோடியின் அலுவலகமாகவும், ஒன்று ஓய்வு எடுக்கவும், மற்றொன்று சமையல் கூடமாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு தேவையான உணவு அங்கேயே தயாரித்து வழங்க ஏற்பாடுகள் தயாராக இருந்தன. ஆனால் அவர் தியானம் நிறைவு செய்யும் வரை எதையும் சாப்பிடவில்லை.
பிரதமர் மோடி தியானத்தின் போது, சுற்றுலா பயணிகள், கடை வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கலெக்டர் தலைமையில் நடந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தியானம் செய்யும் 3 நாட்களிலும் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாதம் வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பைகள் கொண்டு செல்ல அனுமதியில்லை. சுற்றுலா பயணிகள், ஆதார் அல்லது அடையாள அட்டையை காண்பித்து, பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், மோடி தரிசனம் செய்ய உள்ள பகவதி அம்மன் கோயிலிலும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இப்படி சிறு, சிறு சிரமங்கள் இருந்தாலும், பிரதமர் மோடி மூன்று நாள் கன்னியாகுமரியில் தியானம் செய்தது, இந்தியாவின் தென்பகுதியை உலகறிய செய்து விட்டனர். முக்கடல் சங்கமத்திற்கு இதுவரை இல்லாத சிறப்பினை சேர்த்து விட்டது. இனிமேல் இந்தியாவின் சிறந்த சுற்றுலா தளங்களில் கன்னியாகுமரி முக்கிய இடத்தை பெற்று விடும். கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால், அந்த நகரம் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டி விடும் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu