மோடியின் சாணக்கியத்தனம்..உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்துகிறது..!
பிரதமர் மோடியின் வெளியுறவுக்கொள்கை அசாதாரணமானது. ஆழமாக சிந்தித்து எதிர்கால நாட்டு நலன் மற்றும் பாதுகாப்பு கருதியதாக மட்டுமே இருக்கும். ரஷ்யாவை நாம் ஏன் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறாரோ அதே அளவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும் இணக்கமான சூழலை உருவாக்கவேண்டும் என்கிற முக்கியத்துவத்தையும் அவர் உணர்ந்தவர்.
மோடியின் தொலைநோக்கு மிகுந்த வெளியுறவுக்கொள்கை உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. இன்று ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் கூட இந்தியா தலையிட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவின் நிலை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் பிரதமர் மோடி வாய் மூடியிருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? கொஞ்சம் பொருளாதார நிலவர அடிப்படையில் பார்ப்போமா?
நமது வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 94% அமெரிக்கடாலர்களாகவோ,யூரோக்களாகவோ அல்லது பவுண்டுகளாகவோ உள்ளன. அதாவது வர்த்தகம் முழுவதும் மேற்கத்திய நாடுகளை சார்ந்தே உள்ளன. நாம் மொத்த இறக்குமதியாளர்களாக இருக்கிறோம். நமது ஒவ்வொரு பரிவர்த்தனையும் துரிதமானதாக இருக்கிறது. தேவைகள் அடிப்படையில் நாம் அவர்களை சார்ந்து இருக்கிறோம்.
எனவே,தற்போதைய போர் சூழலில் ரஷ்யா எதிர்கொள்ளும் பொருளாதாரத் தடைகளில் 10% தடையை கூட நாம் எதிர்கொண்டால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. சாத்தியமான எல்லா வழிகளிலும் நமக்கான கதவுகள் மூடப்பட்டுவிடும். அதனால், மேற்கத்திய நாடுகளையும் நாம் எந்த வகையிலும் பகைத்துக் கொள்ள முடியாது என்பது நிதர்சனம்.
ஒருபுறம் ரஷ்யாவிடம் நெருக்கமான உறவு. நமது பெரும்பாலான ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவிடம் வாங்கியவையே. சீனாவை எதிர்க்க ரஷ்யாவின் உதவி நிச்சயம் தேவைப்படும். இன்னொரு பக்கம் பாகிஸ்தான் நமது மோசமான எதிரி நாடாக உள்ளது. இலங்கையை சீனாவோடு நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
எனவே, இந்த சூழலில் ரஷ்யாவின் எதிர்ப்பை சம்பாதிப்பது நம் நாட்டு பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. ஒருவேளை ரஷ்யாவை நாம் எதிர்த்தால் பாகிஸ்தானை நண்பனாக்க ரஷ்யா தயங்காது. பாகிஸ்தானுக்கு S-500 உட்பட இலவசமாக ஆயுதங்களைக்கூட தர தயாராக இருக்கலாம்.
ரஷ்யாவிடம் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் முதல் ஏவுகணைகள்,போர் விமானங்கள் வரை நமது 65% பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதி செய்கிறோம். நம்மிடம் உள்ள அனைத்து தொழில்நுட்ப பரிமாற்றங்களும் ரஷ்யாவிடம் உள்ளன. அதனால் இந்தியா மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
எனவே,பிரதமர் மோடி ரஷ்யாவை மட்டும் கருத்தில் வைக்காமல் மேற்கத்திய நாடுகளையும் ஆதரித்து வைத்துக்கொள்கிறார். புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரியாக இருந்தாலும், இந்தியாவையும் அந்த நாடுகள் எதிரியாகப் பார்க்கவில்லை. அதுதான் பிரதமர் மோடியின் வெளியுறவுக்கொள்கையின் சிறப்பு.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைக்கு ஐநாவில் நடுநிலை வகித்தது. அதற்காக அப்படியே விட்டுவிடாமல், உக்ரைனுக்கு தேவையான உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. இந்த நடவடிக்கை தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் கிள்ளுவதற்கான பொருள் அல்ல. இது ஒருவகையான சாணக்கியத்தனம் என்பதே சரியாகும். இதேபோல சீனாவை முந்திக்கொண்டு இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கு உதவி செய்ததையும் குறிப்பிடலாம். உதவியோடு நின்றுவிடாமல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கைக்கு நேரடியாக அனுப்பி இந்திய -இலங்கை உறவினை வலுப்படுத்திகொண்டது.
இதைப்போன்ற பிரதமர் மோடியின் நடவடிக்கை மற்ற நாடுகளுக்கு எப்படியோ, ஆனால், நம்மைப்பொறுத்தவரை அவரின் இந்த முடிவே சரியானதாகும். இந்தியா என்கிற ஒரு தேசத்தை கட்டிக்காக்கவேண்டும் என்கின்ற ஒரு தொலைநோக்கு பார்வை இந்தியாவை சரியான வழியில் நடத்திச் செல்லும் என்பதில் மாற்றமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu