பிரதமர் மோடியின் 100 நாள் திட்டங்கள்..! வளர்ச்சியின் அடுத்த கட்டம் நோக்கி..!

பிரதமர் மோடியின் 100 நாள்  திட்டங்கள்..! வளர்ச்சியின் அடுத்த கட்டம் நோக்கி..!
X

பிரதமர் மோடி (கோப்பு படம்)

மோடி 3.0 அரசு இப்படி ஒரு இலக்கு வைத்து வேலை பார்த்து வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறியதை போல், அத்தனையும் வரும் 100 நாட்களில் இறுதி செய்து விடுவார்கள் என்கிறார்கள். முன்பை காட்டிலும் கொஞ்சம் இறுக்கமாக இந்த கூடையை பின்னக்கூடும். ஓர் வகையில் இது நன்மைக்கே.

பல புதிய முகங்கள் அமைச்சரவையில் பங்கேற்ற போதிலும் முக்கிய இலாகாக்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அது போலவே தமிழக பாஜகவிலும் இருக்காது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் புதியதாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. இது நன்மைக்கே. வரும் நாட்களில் சீர் தூக்கிப் பார்த்து சரி செய்து விடுவார்கள்.

அடுத்ததாக,

இந்திய மின்னணு சாதனங்கள் உற்பத்தி துறையில், தொழில்நுட்ப பண்புகளை மேம்படுத்த திட்டங்கள் தீட்டி வருகிறார்கள். இதில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் பல்வேறு தளத்தில் வித்தை காட்டி கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு நிறுவனம் புதிய தொழில் நுட்ப அடிப்படையில் 3D பிரின்டிங் முறையில் ஒரு ராக்கெட் இஞ்சினையே உருவாக்கி அதனை வெற்றிகரமாக சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

மிக மிக குறைந்த நேரத்தில் அதிக தரத்தில் இது செயல்படுவதை அதனை ஏவி சோதனை செய்து ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள். இஸ்ரோவே அசந்து விட்டது என்கிறார்கள். அதுபோலவே ட்ரோன் வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய இடம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் சரியாக சொல்வதென்றால் நம்மவர்கள் தங்களின் திறமையால் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்தினர்களுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே உள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அறுபத்து நான்கு சதவீதம் 2028 க்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்ப பண்புகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்துமே நம் இந்தியாவிலேயே உற்பத்தியை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த துறையில் உலக அளவில் சீனா தான் முதல் இடத்தில் இருக்கிறது. இஃது நம்மை காட்டிலும் ஆறு மடங்கு முன்னணியில் இருப்பதாக புள்ளி விவர கணக்கு சொல்கிறது. இந்த உயரத்தை தொட நமக்கு இன்னமும் ஆறு ஆண்டுகள் பிடிக்கும்.

இந்த 100 திட்டங்களில் வேளாண் உற்பத்தி மற்றும் அது சார்ந்த உபகரணங்கள், உரங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2028 ஆம் ஆண்டு வரை தங்கு தடையற்ற தரமான உணவு வழங்கல் சங்கிலியை உத்தரவாதம் செய்து உள்ள நிலையில் அதனை மேம்பட்ட ஊட்டச்சத்துடன், மின்னணு உபகரணங்களை கொண்டு தனிநபர் சேர்க்கை வரை ஊர்ஜிதம் செய்ய இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இஃது உலக அளவில் UPI போல் தனித்துவமான செயல்பாடுகளை கொண்டிருக்கும் என்கிறார்கள்.

நிச்சயமாக இது அசாத்தியமான சமாசாரம். அதனை அநாயாசமாக செய்து காண்பிக்க இருக்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா போலும் டிஜிட்டல் டிஸ்ட்ரிபூஷன் ஆக, ஒரு மைல் கல் சாதனையாக இது பார்க்கப்படும்.

இளம் தலைமுறையினருக்கு கல்வி இன்னமும் ஏட்டளவில் தான் இந்தியாவில் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பாட திட்டங்களில் சில நுட்பமான மாறுதல்களை கொண்டு வர இருக்கிறார்கள். கற்கும் மொழியில் முதல் இடத்தில் தாய் மொழி, நம் நாட்டு மொழி, அடுத்ததாக பன்னாட்டு மொழி என மாற்றம் செய்ய உத்தேசித்து இருப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தமிழ் முதல் மொழியாக அடுத்ததாக நம் அண்டை மாநில மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஏதோ ஒன்று நம் நாட்டின் மொழியாக இடம் பெறும். பன்னாட்டு மொழியாக ஆங்கிலம் உள்ளிட்டவை இடம் பெறும். ஆக மாநிலத்திற்கு அக்கம் பக்கத்தில் வரும் மாநில மொழி, நாட்டு மொழியாக அடையாளப் படுத்தப்படும் என்கிறார்கள். நீண்ட கால நோக்கில் இது நிச்சயம் நல்லதோர் திட்டமிடல் போல் தெரிகிறது.

இது அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI ) மூலம் ஒருங்கிணைக்க மேம்பட்ட விதத்தில் மாணவர்களை ஒன்றிணைத்து வகுப்புகள் எடுக்க வழிவகை செய்யப்படும் என்பது போல் திட்டம் மிட்டு வருகிறார்கள். இதற்கு இலக்காக 2028 ஆம் கல்வி ஆண்டு இருக்கும் எனவும் பரிட்சார்த்த முறையில் 2026 ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற மற்றும் சில கிராமங்களில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள ஏற்பாடுகளை தீவிரப் படுத்தி இருக்கிறார்கள்.

ராகுல் தேர்தல் பிரசாரத்தின் போது, கைவிடுவதாக சொன்ன அக்னிபாத் திட்டத்தை இன்னமும் முன்னோடி திட்டமாக பள்ளிகளில் தற்போது இருக்கும் NCC மற்றும் ஸ்கௌட், கல்லூரியில் இடம் பெறும் NSS ஆகியவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட திட்டமிடலுக்கு தயாராகி வருகிறார்கள்.

எட்டாம் வகுப்பு முடித்த அனைவருக்கும் நாட்டின் நலன் சார்ந்த கல்வியறிவு, ஒரு பாடத்திட்டமாகவே இடம் பெறும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்... அதன் செயல் முறை பயிற்சி வகுப்புகளாக NCC வரும் என்கிறார்கள். நிச்சயமாக வரவேற்க கூடிய இளம் தலைமுறையினருக்கான திட்டமிடல் தான் இது.

அடுத்ததாக மிக முக்கியமாக நாட்டில் உள்ள மிக முக்கியமான நூறு தனியார் நிறுவனங்களை தேர்வு செய்து ஒவ்வொரு நிறுவனமும் குறைந்த பட்சம் 10, 50, அதிகபட்ச 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை புதியதாக ஏற்படுத்த வேண்டும் என்பது போல் புதிய யோசனை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதற்கு தனியே வரிச் சலுகைகள் மற்றும் இதர உதவிகள் ஏற்படுத்தி தர உத்தேசித்து இருப்பதாக சொல்கிறார்கள். இது சரிவரும் பட்சத்தில் கண்களுக்கு புலப்படாத வகையில் ஓர் சங்கிலியில் இணைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரம் சீராக வளர்ச்சி காணும். தலைமுறை தாண்டி பலன் தரும்.

இவற்றை எல்லாம் வரும் 100 நாட்களில் வரன்முறை படுத்தி அனைத்திற்கும் ஓர் தொடக்க புள்ளி கொடுத்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். நிச்சயம் பலன் தரக்கூடிய திட்டமிடல் இவை அனைத்தும்.

ஆக... தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி சொன்னது போல் இதுவரையில் நடைபெற்றது ட்ரைலர் மட்டுமே மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கப் போகிறது என்பதற்கு ஏற்றார் போல் வரும் நாட்களில் புலிப் பாய்ச்சலில் இந்த அரசு செயல்பட இருக்கிறது. அதற்கான வழிமுறையும், திட்டமிடலும் செயல்முறைகளும் தொடங்கி விட்டன.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா