மத்திய அரசின் அனுமதியுடன் மேக தாதுவில் அணை கட்டுவோம் : கர்நாடகா முதல்வர் அறிவிப்பு

மத்திய அரசின் அனுமதியுடன் மேக தாதுவில் அணை கட்டுவோம் : கர்நாடகா முதல்வர் அறிவிப்பு
X

ஹொகேனக்கல் பகுதியில் உள்ள மேக தாது பகுதி. இங்குதான் கர்நாடகா அணை கட்ட திட்டமிடுகிறது.

மத்திய அரசின் அனுமதியுடன் மேக தாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இதற்கு டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது,

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது பகுதியில் ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தோம். அதையடுத்து மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தென்மண்டல தீர்ப்பாயம் விசாரிக்கத் தேவை இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் அனுமதி பெற்று மேகதாதுவில் விரைவில் புதிய அணை கட்டும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய அணை கட்டுவது தொடர்பாக சட்டம் மற்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பாக விசாரிக்கத் தேவை இல்லை என்று தேசிய தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு கர்நாடகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா மேக தாது பகுதியில் அணை கட்டினால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வந்து சேரும் நீரின் அளவு குறையும். கர்நாடகா தமிழகத்துக்கு நீரின் அளவை குறைப்பதற்காகவே இந்த அணை கட்டும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!