மணிப்பூரில் அமைதி திரும்புவது அவசியம்..அவசரம்..!
தீப்பந்தம் ஏந்தி நிற்கும் மணிப்பூர் பெண்கள்
மணிப்பூரில் குக்கி- மெய்தி சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கும் இன மோதல்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் நடந்துவரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஏற்கனவே போராடி வரும் பாதுகாப்புப் படைகள் இப்போது ஒரு புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். போராட்டத்திற்கு கூடும் கூட்டம் பெண்களின் தலைமையில் நடக்கிறது. பெண்களே போராட்டங்களை வழி நடத்துகிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை செல்வதற்கு முயற்சிக்கும் பணியாளர்களின் பாதையைத் தடுக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் கொண்ட பெண்கள் தலைமையிலான குழு பாதுகாப்பு படையினரைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். அதனால், அவர்கள் பிடித்து வைத்திருந்த 12 போராளிகளை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட 12 போராளிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு 18 ராணுவ வீரர்களை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர் என்றும் தெரிகிறது. ஆனால், உள்ளூர் பெண்கள் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை முறியடிக்கும் விதமாக தடுத்து வருகின்றனர்.
அந்த 12 போராளிகளையும் பாதுகாப்பு படையினர் விடுவிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரே பெண்களின் முற்றுகை முடிவுக்கு வந்தது. இதற்கு முன்னரும் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதும் பதிவாகியுள்ளன.
ஜூன் 22ம் தேதி அன்று இம்பாலில் ஒரு பெண்கள் தலைமையிலான குழு மத்திய ஏஜென்சி குழுவைத் தடுத்தது. அடுத்த நாள், ஆயுதம் ஏந்திய போராளிகள் தானியங்கி துப்பாக்கியால் சுடும் பகுதிக்குள் பாதுகாப்புப் படை வீரர்களை நுழைய விடாமல் பெண்கள் தலைமையிலான குழு தடுத்ததாக ராணுவம் ட்வீட் செய்திருந்தது.
எது எப்படி இருந்தாலும் மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு முழு வீச்சில் செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மணிப்பூர், அமைந்ததுள்ள இடம் மியான்மர் மற்றும் சீன எல்லைப்பகுதியாகும். மிகவும் உணர்வுப்பூர்வமான பகுதியாக இருப்பதால் நாம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை மத்திய அரசும் மணிப்பூர் ஆட்சியாளர்களும் உணர்ந்து செயல்படவேண்டிய தருணமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu