சாலைகளை ஹேமமாலினி கன்னத்துடன் ஒப்பிட்டதால் சர்ச்சை; மன்னிப்பு கேட்ட அமைச்சர்
கோப்பு படம்
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் நகர் பஞ்சாயத்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சிவசேனாவை சேர்ந்த குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், தனது அரசியல் எதிர் கட்சி தலைவரான என்.சி.பி தலைவர் ஏக்நாத் காட்சேவை கிண்டல் செய்தார்.
30 ஆண்டுகளாக எம்எல்ஏவாக பணியாற்றியவர்கள் எனது தரங்காவ்ன் தொகுதிக்கு வர வேண்டும். எனது தொகுதியில் நான் செய்த வளர்ச்சியை அவர்கள் நேரில் பார்க்க வேண்டும். நீங்கள் தரங்கானில் உள்ள சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்களைப் போல இருப்பதைப் பார்க்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வேன்என்று கூறினார்.
இழிவான மற்றும் கண்ணியமற்ற கருத்துக்களை தெரிவித்ததற்காக அமைச்சருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தியதற்காக பாட்டீல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் பிரவின் தரேகர் கூறினார்.
அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், தனது தொகுதியில் உள்ள சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக, என்.சி.பி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாநில மகளிர் ஆணைமும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
எனது தொகுதியில் நல்ல சாலைகளை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால், எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சிவசேனா அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.
பாஜகவின் மகளிர் பிரிவு பொதுச் செயலாளர் உமா கப்ரே கூறுகையில், அமைச்சர் பாட்டீல், ஹேமமாலினியின் பெயரை விவாதத்தில் இழுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.
அமைச்சர் மன்னிப்பு கேட்டதையடுத்து இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று என்.சிபி கூறினாலும், அமைச்சர் பாட்டீலுக்கு எதிராக பாஜக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க யோசித்து வருவதாக கூறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu