மக்களவை தலைவர் பதவி : காங்கிரஸ் புதிய நிபந்தனை..!
மக்களவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதன்மூலம் நாட்டில் முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவரை மக்களவைத் தலைவர் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்ததே வரலாறு.
இந்நிலையில், தற்போதும் மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களவையின் மரபை தொடர எதிர்க்கட்சி வேட்புமனுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுங்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த கே.சி.வேணுகோபால் பேசியதாவது:
“நாங்கள் தற்போதும் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துணைத் தலைவர் பதவியை கொடுக்க தயாராக இருந்தால், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்களவைத் தலைவர் வேட்பாளரை ஒருமனதாக ஆதரிப்போம்.
எதிர்க்கட்சியினரை அவர்கள் மதிக்க வேண்டும். கடந்த காலங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மக்களவைத் தலைவராகவும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளனர். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது 10 ஆண்டுகள் பாஜகவினர் தான் துணைத் தலைவராக இருந்தனர்.
ராஜ்நாத் சிங் நேற்று மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு ஆதரவு கோரிய போது, ‘‘பாஜக தரப்பு மக்களவைத் தலைவரை ஆதரிப்பதில் மகிழ்ச்சி என்றும், துணைத் தலைவர் பதவி எங்களுக்கு வேண்டுமென்றும் கேட்டிருந்தார். அதற்கு பிரதமரிடம் பேசிவிட்டு மீண்டும் அழைப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu