மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது

மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது
X

மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு 

நாடு முழுவதும் தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள் அடுத்தடுத்து தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

இந்தியா டுடே தனது கருத்துக்கணிப்பில் கூறியிருப்பதாவது, சுமார் 35 ஆயிரம் பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பானது 2023 டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி வரை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் ஐஎன்டிஐஏ கூட்டணியே கைப்பற்றி மகத்தான வெற்றி பெறும். அதுபோல, கேரளத்திலும் 20 தொகுதிகளையும் ஐஎன்டிஐஏ கூட்டணியே பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணி 24 தொகுதிகளிலும், ஐஎன்டிஐஏ கூட்டணி 4 தொகுதிகளிலும் வெல்லும் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கூட்டணியே கைப்பற்றும் என்றும் தெலங்கானாவில் ஐஎன்டிஐஏ கூட்டணி 9 தொகுதிகளையும் பாஜக கூட்டணி 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளையும் பாஜக கூட்டணி 18 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது.

பிகாரில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளை வெல்லும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 8 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டைக் காட்டிலும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 70 தொகுதிகளை வென்று சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ல் 62 தொகுதிகளை வென்றிருந்தது.

இந்த கணிப்புகள் எல்லாம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்தான் என்றும், இவை மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேட்ரிஸ் நியூஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், தெலங்கானா மற்றும் தமிழகத்திலும் பாஜக தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 21 இடங்களில் வெற்றி பெறும் என்றும், இது கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வென்ற தொகுதிகளைக் காட்டிலும் 4 தொகுதிகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 5 தொகுதிகளையும், ஜனதா தளம் 2 தொகுதிகளையும் வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பாஜகவின் 400 தொகுதிகள் என்ற கணக்குக்கு கர்நாடகம் பேருதவி செய்யலாம் என்றும் தெரிகிறது. திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் தமிழகத்தில் பாஜக ஒரே ஒரு தொகுதியில் வெல்லும். திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் 36 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் அதிமுக மற்றும் இதர கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்தரி மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் கூட்டணி 19 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 6 தொகுதிகளிலும் வெல்லும். இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தோல்வியை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

தெலங்கானாவில் 5 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், பிஆர்எஸ் கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திரத்திலும் கேரளத்திலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என்றே கூறப்படுகிறது. இங்கு வெற்றிக் கணக்குகளைத் தொடங்குவதே கஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!