கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது-எடியூரப்பா
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தனது இல்லத்தில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோயை கட்டுப்படுத்துவதற்கான முறையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும். பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும். பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. பெங்களூருவில் நாள் ஒன்றுக்கு 1377 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் 16921 பேர் கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரில் மட்டும் 60,000 பேருக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோரமங்களா உள்விளையாட்டு அரங்கத்தில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 5-ந் தேதி முதல் அந்த மையம் செயல்பட தொடங்கும். தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் ஒதுக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஒரு நாளைக்கு 40,000 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கர்நாடகத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. இங்கு ஒரு நாளைக்கு 3000 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெங்களூருவில் ஒருநாளைக்கு 2000 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாது. மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu