2024 குடியரசு தின விழா: ஜோ பைடனுக்கு அழைப்பு
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, உலக நாடுகளின் தலைவர்களை அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார். அதேபோல, இந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்சிசி பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, வரும் 2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகவலை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து எரிக் கார்செட்டி கூறுகையில், “இந்தியாவில் 2024 ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இதன் மூலம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 2023 ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாஷிங்டன் பயணத்தின் சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றத்திற்கு தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாட்டில் ஜோ பைடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது, இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் 7-வது மற்றும் கடைசியாக நிலுவையில் இருந்த உலக வர்த்தக அமைப்பின் தகராறையும் தீர்த்துக் கொண்டன.
பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின் போது 6 பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. மேலும், நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் நமது பன்முக உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் அனைத்து பரிமாணங்களிலும் இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை மாற்றும் பணியைத் தொடர இரு தலைவர்களும் தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu