ஜெகனை காப்பாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி?

ஜெகனை காப்பாற்றுவாரா  பிரதமர் நரேந்திர மோடி?
X

பிரதமருடன் ஜெகன்மோகன்ரெட்டி.(கோப்பு படம்)

சந்திரபாபுநாயுடுவிடம் இருந்து ஜெகன்மோகனை பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்றுவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இப்போது இரண்டு பெரிய பிராந்தியக் கட்சிகளான என் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (யு) ஆகிய இரு கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளார். இதனால் பிரதமர் மோடியின் அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை பலமுறை உறுதிப்படுத்தி விட்டோம்.

இதுவரை மோடிக்கு பிரச்னை வரும் என காத்திருந்த அத்தனை பேரும், தற்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள மோடியிடம் திரைமறைவு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர். குறிப்பாக பா.ஜ.க., தலைவர்களை பிடித்து மோடிக்கு துாது விடத்தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக பிரதமர் மோடி சந்திரபாபுநாயுடுவுன் பெரிதும் நட்புடன் இருப்பதால், நாயுடு எதைக் கேட்டாலும் மோடி நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சிபிஐ வழக்கில் தனது அரசியல் எதிரியான ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு மோடி அரசை தெலுங்குதேசம் கட்சித் தலைவர் கோரக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஜெகன்மோகன்ரெட்டி முந்திக்கொண்டு பா.ஜ.க.,வுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் பலனராக ஜெகன் மோகன் ரெட்டியை மோடி குறிவைக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், எதிர்காலத்தில் பாஜகவுக்கு ஜெகனின் ஆதரவு தேவைப்படலாம். எதிர்காலத்தில் எந்த சூழலும் எப்படியும் மாறும், எனவே மோடி ஜெகன் மீது சற்று மென்மை காட்டவே வாய்ப்புகள் உண்டு என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெகனுக்கு நான்கு எம்.பி.க்கள் உள்ளனர், அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மிகவும் மதிப்புமிக்கவர்கள். குறிப்பாக என்.டி.ஏ மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் தப்பிப்பிழைத்ததால், ஜெகன் அப்போது கை கொடுக்க முன்வருவார். இப்படி திரைமறைவு பேச்சுவார்த்தையும் நடந்திருக்கலாம். தவிர சந்திரபாபுநாயுடுவும் தனது எதிரியான ஜெகனை கடுமையாக பழிதீர்க்க மாட்டார். காரணம் பட்டு தெளிந்துள்ளார் சந்திரபாபுநாயுடு.

இப்போது ஜெகனை தொட்டு தொந்தரவு கொடுத்தால், நாளை ஆந்திர அரசியல் களம் மாறினால் மீண்டும் சந்திரபாபு மகன் மீது ஜெகன் கை வைப்பார். இப்படி ஒரு போட்டி போட்டு பழிவாங்கும் அரசியல் வேண்டாம் என சந்திரபாபு நாயுடுவும் முடிவுக்கு வந்திருக்கலாம். இருப்பினும் அவர் வெளிப்படையாக அறிவிக்க மாட்டார். எப்படியும் மோடியின் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் தான் சந்திரபாபு நாயுடு காய் நகர்த்துவார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!