நாளுக்கு நாள் உச்சத்தை எட்டும் இந்தியா- சீனா எல்லை பிரச்னை..!

நாளுக்கு நாள் உச்சத்தை எட்டும் இந்தியா- சீனா எல்லை பிரச்னை..!
X

கோப்பு படம்.

பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இரும்புச் சகோதரன் சீனா துவம்சம் செய்து விடுவான் என்று சொன்னவர்கள் ஏராளம்.

சீனா எனும் இந்தியாவின் இரும்புச் சகோதரன் இந்தியாவை துவம்சம் செய்துவிடுவான் என்று சிலர் சொல்லும் போது இந்திய தேசத்தை நேசிப்பவனால் கூட, இந்தியா ஒரே நேரத்தில் பாகிஸ்தானையும், சீனாவையும் அடக்கி விடும் என்று நம்பிக்கையோடு சொல்ல முடியாமல் இருந்தது. ஏனெனில் அன்று நிலை அப்படித்தான் இருந்தது. இதனால் அதி தேசபக்தர்கள் கூட இப்படி ஒரு விமர்சனத்தை அமைதியாக உள்வாங்கிக் கொண்டு மௌனமாக இருந்தனர்.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இந்தியா ஒரே நேரத்தில் பாகிஸ்தானையும், சீனாவையும் துவம்சம் செய்து விடும். அதற்கு காரணம் 10 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ வளர்ச்சி, பாதுகாப்பில் கண்ட முன்னேற்றம் என்று மட்டும் சொன்னால் நாம் ஒரு போரின் ஆழத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அர்த்தம்.

ஒரு போரில் வெல்ல வேண்டுமென்றால் நமது ராணுவ வலிமை மட்டும் போதாது. பொருளாதார வலிமையும், போருக்கு துணை நிற்க ஆதரவு தரும் தேசங்களும் அவசியம். ஆம் இன்றும் உக்ரைன் என்று ஒரு நாடு, ரஷ்யா என்று வலிமையான நாட்டுடன் இரண்டு வருடமாக போரிட்டுக் கொண்டு இருக்கிறது. இன்றும் அந்த போர் தொடர்கிறது. அதற்கு உக்ரைனுக்கு நேச நாடுகள் தரும் ஆதரவு என்பதை நாம் சொல்லாமல் இருக்க முடியாது.

அந்த நேச நாடுகள் வெறும் உக்ரைனுக்காக, அல்லது பொருளாதாரம் இல்லாத ஒரு தேசமாக இருந்தால் அந்த நாடுகள் இஸ்ரேல் காஸா போரை காரணம் காட்டிவிட்டு வெளியேறி இருக்கும். ஆனால் அதன் பொருளாதாரம் பலமானதாக இருந்ததால் இன்றுவரை பின்னால் நிற்கிறது நேச நாடுகள்.

ஆனால் இதே ரஷ்யா, அந்த உக்ரைனிடம் அணு ஆயுதங்கள் இருந்திருந்தால் தாக்கி இருக்குமா? அல்லது ரஷ்யாவிடம் அத்தனை அணு ஆயுதங்கள் எல்லாம் இருந்திருந்தால் அத்தனை நாடுகளும் ரஷ்யாவை இதுவரை விட்டு வைத்திருக்குமா?

ரஷ்யாவின் மீது நேச நாடுகள் மறைமுகமாக போரிட்டது. அதனை போரில் வெல்லவல்ல, பொருளாதாரத்தால் வெல்வதே. ஆனால் அது முடியாமல் போனதால் உக்ரைனின் நேசநாடுகளும் வீழ்கிறது.

அதே பொருளாதாரம் தான் இன்று இந்தியாவின் மீது சீனா கைவைக்கவும், இந்தியாவிற்கு ரஷ்யா இந்த விஷயத்தில் ஆதரவு தராவிட்டாலும் பின்னால் இருக்கும் சீனாவின் எதிரி நாடுகள் ஆதரவு தருமே. நம்மிடம் இருக்கும் அணு ஆயுதமும், அதை சீனாவின் எந்த மூலையிலும் வீசும் சக்தியும் நம்மிடம் இருப்பதால், அந்த இரும்பு சகோதரனால் இந்தியா மீது கை வைக்க முடியாது என்ற நிலை பத்தே ஆண்டுகளில் உருவாகி விட்டது. இது அவ்வளவு சாதாரணமானதல்ல.

ஆனால் அதே பொருளாதாரமும், அணு ஆயுதமும் சீனாவிற்கும் இருக்கும் சாதகத்தை நாம் மறந்து விட்டால், நமது பார்வை தவறாகிவிடும். அதை நன்கு உணர்ந்த இந்தியா சீனாவை எப்படி கார்னர் செய்கிறது? அதன் பொருளாதாரத்தை எப்படி சிதைக்கிறது? அதன் மீறலை மிரளாமல் எப்படி சமாளிக்கிறது?

இந்திய பிரதமர் மோடியை மூன்றாவது முறை பிரதமராக பதவி ஏற்க விடக்கூடாது என்று சீனா அதி தீவிரமாக உழைத்தது. மோடி எப்படியும் தோற்பார் என்று மிகவும் தீர்க்கமாக நம்பியது. ஆனால் அதை மீறி மோடி மூன்றாவதாக பதவி ஏற்ற போது சீனாவின் பொறாமை உச்சத்தை தொட்டது. ஆம். சீன அதிபர் மோடிக்கு வாழ்த்து சொல்லும் நிலையில் கூட இல்லை. சீனா தனது மூன்றாம் நிலை வெளியுறவு செயலர் மூலம் வாழ்த்து சொல்லியது.

அதுவும் வாழ்த்து செய்தியில் இந்திய- சீனாவின் வேற்றுமைகளை கடந்து பரஸ்பரம் நட்புணர்வோடு இந்த உறவு வளரும் என்று சொன்னது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. தன் வெளியுறவுத்துறையின் கீழே உள்ள அதிகார மட்டத்தில் உள்ள அதிகாரி மூலம், சீனாவின் எல்லை மீறல்களை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டோம், அதை சரி செய்யாமல் நட்புணர்வு வளராது என்று பதில் சொன்னது.

சரி, அத்தோடு முடிந்து விட்டது என்றால், இல்லை தைவானின் வாழ்த்துக்கு இந்திய பிரதமர் கொடுத்த ஆதரவு சீனாவின் பிடறியில் கைவத்து சீண்டிப் பார்த்தது. அதற்கு சீனா கடும் கண்டனத்தை பதிவு செய்தது. அதற்கு தைவானின் பதில்கள் சீனாவை செல்லாக் காசாக்கியது.

ஆம், சீனா நினைத்தது எல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா கைவைக்கும் என்று தான். சீனா மட்டுமல்ல நம்மைப் போன்ற தேச பக்தர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்தியா கைவைத்தது பிடறியில் அல்ல, பாகிஸ்தானின் உந்து சக்தியான சீனாவின் கழுத்தில்.

தைவானோடு நின்று விடும் என்று நினைத்த சீனாவிற்கு இந்தியாவின் பிரம்மாஸ்திரம் சீனாவை சின்னாபின்னமாக்கி விட்டது. ஆம், இந்தியா கைவைத்தது திபெத் என்னும் தீர்ந்து போனதாக நினைத்த தீராப்பகை மீதே. அதை இந்தியா தான் மட்டும் செய்யாமல் அமெரிக்காவோடும், ஐரோப்பிய யூனியன்களோடு சேர்ந்து அதனை அங்கீரிக்கச் செய்தது.

ஆம், சீன தேசம், திபெத் என்ற நாட்டின் பெயரையே மாற்ற நினைத்தபோது, இந்தியா திபெத்தின் முப்பது நகரங்களின் பழைய பெயர்களை மீண்டும் புதுப்பித்தது. அது ஒருங்கிணைந்த சீனாவின் பகுதி என்ற நிலையை மாற்றி அது ஒரு சுதந்திர தேசம் என்பதற்கான விதைக்கு தண்ணீர் விட்டு சீனாவின் ஆசையில் ஆசிட் தெளித்தது. அமெரிக்க செனட்டில் திபெத்தை அங்கீகரிக்க, அதன் தலாய் லாமாவை அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகள் சந்திக்க வைத்தது. இப்படி ஒரு பக்கம் அதன் கோபத்தை சீண்டி மேலும் மேலும் தவறு செய்ய வைக்க, சீனா அதன் கோபத்தை பிலிப்பைன்ஸின் மீது காட்டியது.

இங்கே நாம் நினைப்பது போல இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து சீனாவின் மீது போர்தொடுக்கும் என்றால் அது தவறு. அதற்கு மாறாக சீனாவை சீண்டி, அதனை தவறுக்கு மேல் தவறு செய்ய வைத்து, அதன் கோபத்தை தூண்டி, அதன் இயலாமை மூலம் அதனை இல்லாமை ஆக்க முடிவு செய்ததுதான்

ஆம், எப்படி பாகிஸ்தான் இன்று ஒரு மோசமான நிலையில் இருந்த போதும் நம்மால் அதன் மீது போர் தொடுக்க முடியவில்லையோ அதுபோல சீனாவால் தைவானின் மீதோ, பிலிப்பைன்ஸின் மீதோ போர் தொடுக்கவே முடியாது, தொடுத்தால் வீழ்வது தைவானல்ல சீனா.

அதனால் அது செய்யும் அத்து மீறல்கள் உலகளவில் சீனாவின் மீது எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டி, அதன்மூலம் அதன் பொருளாதாரத்தை சிதைக்கவே இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிடுகிறது. அப்படி நடக்கும்போது சீனா ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்தி ஆயிற்றே அதை அசைக்க முடியுமா?

சீனா செய்த பல முதலீடுகள் அர்த்தமற்றவை. ஏனெனில் அவை வீம்புக்கு செய்தவை. அதன் முதலீடுகள் எல்லாமே அது எதிர்பார்த்த வளர்ச்சியை அடைந்தால்தான் அது ஆதாயம், இல்லாவிட்டால் அதுவே அபாயம். உதாரணமாக, சென்னை-கோவைக்கு எட்டு வழி சாலை தேவை. ஆனால் 16 வழி சாலை அமைத்தால், அது தேவையற்றதாகி, அதன் பராமரிப்பு செலவே கொன்று விடுமல்லவா?/ அதுபோல சீனா வீம்புக்கு செய்த முதலீடுகள் ஏராளம்.

ஆம், சீனா கட்டிய உலகின் மிகப்பெரிய அணை, மலை முகட்டில் கட்டிய ஏர்போர்ட், பாலைவனத்தில் ஏற்படுத்திய அதிபயங்கர முதலீடுகள், உலகளவில் முதலீடு செய்த சில்க் ரோடு, என்று பலவும் அதனை சீரழித்துவிடும்.

ஆம், நாம் நம் வசதிக்கு மீறி ஒரு வீட்டை கட்டினால் எப்படி நம்மை சாய்த்து விடுமோ அதுபோலத்தான், சீனாவின் பொருளாதாரம் பெருமளவில் பயன்பாடில்லாமல் சிதிலமடைகிறது. ஆனால் அது சின்னாபின்னமாவது அதன் மீது வெளி நாடுகள் செய்யும் போரினால் அல்ல, அடிப்படை தேவைக்காக அல்லல்படும் மக்கள் மூலம் நிகழும் உள்நாட்டு போரினாலே தான்!

ஒரு நாடு தோற்கடிக்கப்பட வேண்டுமானல், அதன் பலமும், பலவீனமும் மட்டுமல்ல, அதன் நட்பும் பகைமையும் மிக முக்கிய காரணமாக வேண்டும். சீனா தன் அருகில் இருக்கும் ரஷ்யா உட்பட 14 அண்டை நாடுகளோடு பகையில் உள்ளது. அது தவிர தென்சீனக்கடல் என்ற அத்துமீறலில் சிங்கப்பூர் வரை அதன் எல்லை மீறல்கள் மூலம் எங்கும் பகைவர்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறது.

அதுமட்டுமல்ல, சீனாவின் வெளியுறவு என்பது உலகத்தில் ஏழை நாடுகளின் சர்வாதிகாரிகள் மூலம் அவர்களுக்கு கடன் கொடுத்து, அதனை வலையில் வீழ்த்தி, அதன் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வந்தது. அப்படி இலங்கை, பாகிஸ்தான், ஆப்ரிக்கா என்று ஏழை நாடுகளுக்கு நேரடியாக கொடுத்த கடன் மட்டும் 1.34 டிரில்லியன் டாலர்கள். இது போக மறைமுகமாக கொடுத்த கடன்கள் அதன் வலிமை சரியும் போது தெரியும்.

இப்போது அந்த நாடுகள் கொரானாவிற்கு பிறகு அதன் பொருளாதாரம் சரிந்தபின்னர், அதற்கு மாறாக அதன் இயற்கை வளங்களையும், அதன் முக்கிய பகுதிகளையும் நீண்டகால லீசுக்கு கொடுக்க சொல்லி வற்புறுத்தி வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறது சீனா.

அப்படியெனில் அவர்களால் சீனாவை நேரடியாக பகைக்க முடியாது. ஆனால் அதன் பகைவர்களை ஆதரிக்க முடியுமல்லவா?அந்த நாடுகள் எதிர்பார்ப்பது சீனாவின் அழிவை. ஆம் கடன் கொடுத்தவன் இறந்து போனால், வாங்கியவனுக்கு சந்தோஷம் வராதா? அதற்காக காத்திருக்கிறது கடன் வாங்கிய பரம ஏழை நாடுகள்.

மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்ற எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் விஷயங்கள். ஆம் அதை அந்த ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா என்ற வல்லரசே இந்தியாவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் எதிர்பார்ப்பது போல பூனைக்கு மணி கட்டப்போவது இந்தியாவல்ல, சீனர்களே..

ஆம் அதன் பொருளாதாரம் சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் செத்து விடவில்லை. அந்த நாடு தேவையில்லாத பல புராஜெக்டுகளை வீம்புக்காக செய்து கொண்டிருக்கும் வேளையில் , சீன மக்களின் முதலீடுகள் கோவிட்டுக்கு பிறகு கைவிட்டு போனது. தேவைக்கு மீறி செய்த அதன் ரியல் எஸ்டேட் முற்றிலும் படுத்து விட்டது. அதில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்த மக்களின் பணம் முடங்கி விட்டது. உலகத்திற்கெல்லாம் கடன் கொடுக்கும் சீன அரசு, அவர்களின் மக்களுக்கு கைகொடுத்து ஊக்கப்படுத்த வேண்டாமா?

அதை செய்யாத சீனா, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைக்கிறது. இம் என்றால் சிறைவாசம், ஆம் என்ற வனவாசம் என்று எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மக்கள் சக்திகள் பல முறை எழுந்த போதும் அது அடக்கி வாசிக்கப்பட்டது, அழித்து ஒழிக்கப்பட்டதும் அவர்கள் இன்று எதிர்பார்ப்பது மாடமாளிகையும், பளபளக்குக் வீதிகளுமல்ல, சுதந்திரமான சுவாசம்.

இந்த நிலையில் இந்தியா தனது சீன எல்லையில் பெரியளவில் ஆயுதங்களை குவித்து வருகிறது. அதற்கு மாறாக சீனா இரண்டு மடங்கு அதன் ராணுவத்தை குவிக்க வேண்டும். அதுவும் இமயமலை எல்லை போன்ற மிக மோசமன சூழலில் அந்த ராணுவத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அது போன்ற சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்படாத அதன் டுபாக்கூர் கம்யூனிஷ ராணுவம், அங்கே செல்ல மறுக்கிறது.

அதனால் அங்கே இருக்கும் ராணுவத்தை மாற்றவும் முடியவில்லை. புதிதாக குவிக்கவும் முடியவில்லை. அதனால் அவர்களுக்கு பாதுகாப்பு தர பெரியளவில் கட்டமைப்புகளை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு இடத்தில் ஏற்படுத்தி முடிந்தால் இந்தியா ஒரு புதிய பகுதியில் தன் படைகளை குவிக்கிறது. அதை சமாளிக்க மீண்டும் சீனா அதே தவறை செய்ய வேண்டி இருக்கிறது.

ஆனல் நமது மீடியாவில் சீனா இந்திய எல்லையில் படையை குவிக்கிறது. என்ன செய்கிறார் மோடி என்று நம்ம அரசியல்வாதி ஒருவர் கேட்கிறார். ஆனால் அவர்கள் படையை குவிக்க காரணமே அந்த மோடி மஸ்தான்தான் என்பது அவர்களுக்கு புரியவில்லை..

சரி, அதுவெல்லாம் சீனாவின் கட்டமைப்புகள்தானே, அதற்கு எதிர்காலத்தில் பயன்படத்தானே போகிறது என்றால், நம்மால் இன்னும் அஜித் தோவாலை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் அர்த்தம்.

ஆம் அந்த கட்டமைப்புகள் எழுவது திபெத் பகுதியில். அந்த திபெத் நாளை சீனாவின் கைவிட்டு போனால்? அது சுதந்திரத்துடன், இந்தியாவின் ஆதரவு நாடாக மாறினால், நமது ராணுவத்திற்கு அந்த கட்டமைப்புகள் உதவுமே. இதுதான் போட்டு வாங்கி, எஞ்சாய் செய்வது. இதனால் ஒரு பக்கம் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மறுபக்கம் பொறுமை இழக்கும் அதன் ராணுவம். அதற்கு மேலாக சீனாவை மீண்டும் மீண்டும் தவறு செய்ய தூண்டும் இந்தியா.

இப்போது புரிகிறதா, சீனாவின் வலிமை ராணுவமல்ல, பொருளாதாரம் அதுவே சிதைந்து போனால். அதன் இன்னொரு முக்கிய வலிமை, அதன் மக்களை கட்டுக்குள் வைத்திருப்பது. இது இரண்டும் முடிந்து போனால் சீனா மடிந்து போகாதா? ஆனால் இதை வைத்து சீனா தற்போதே முடிந்து போன கதை என்று நாம் கருதினால், நமது கணக்கு தவறாகிப்போய்விடும். அது ஒரு பக்கம் மட்டும் பார்க்கும் நியாயமாகி விடும் ஆம், அது இந்தியாவை ஒரு போதும் போரில், நேரில் வீழ்த்த முடியாது என்பது சீனாவிற்கு நன்கு தெரியும். ஆம் அதனால் வியட்நாமிடம் சீனா செருப்படி வாங்கியது முதல் இந்திய எல்லையில் வாங்கிய அடிவரை அதற்கு தெரியாத என்ன?

அதனால் அது பயன்படுத்தும் வலிமையான ஆயுதம் இந்தியாவில் இருக்கும் சுயநலவாதிகள். இந்தியாவின் தேசவிரோதிகளை அதன் வலிமையான ராணுவத்திற்கு மேலாக கருதுகிறது. அதனால் நம் நண்பர்கள் மட்டுமல்ல நாமும் கேட்கும் கேள்வி, இந்தியாவில் உள்ள கேடுகெட்ட தேசவிரோதிகளை மோடி அரசு இந்தியாவிற்குள் எப்படி சமாளிக்க போகிறது என்பது தான்.

அதற்கான சாத்தியம் இருக்கிறது என்றாலும், இன்றுவரை பெரும்பாலான பாஜக ஆதரவாளர்களிடமே இந்த நம்பிக்கை இல்லை என்பது வேதனையான விஷயமே. ஆனால் இத்தனை விஷயங்களை திட்டமிட்ட மோடி அரசு இதற்கு திட்டமில்லாமலா இருக்கும் ஒரே நம்பிக்கையில்தான் இருக்கிறார்கள். அதற்கான பதிலை காலம்தான் பதிலாக்க முடியும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!