பழங்குடியின மக்களோடு வாழும் ஐஐடி பேராசிரியர்..! ஆச்சர்ய மனிதர்..!

அலோக் சாகர் எங்கு சென்றாலும் சைக்கிள் பயணம்தான்.
ஒருவரது உருவத்தைப் பார்த்து அவரை எடை போட முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் நாம் இந்த செய்தியில் பார்க்கப்போகும் நபர். ஆனால், அவர் சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். ஆனால், இன்று அவர் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டால் இன்னும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
அலோக் சாகர், அவரது பெயர். டெல்லி ஐ.ஐ.டியில் படித்து பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அதன்பின், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹூஸ்டன பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்று ஐ.ஐ.டி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் என்ன நினைத்தாரோ திடீரென பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு புறப்பட்டார். அவர் வந்தடைந்த இடம் 750 குடும்பங்கள் வசிக்கும் பழங்குடியின கிராமம்.
ஆமாங்க.. கடந்த 35 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமத்தில் வசித்து வருகிறார், அந்த பேராசிரியர். அங்கு வாழ்ந்துகொண்டு அங்குள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறார். சுற்றியுள்ள எல்லா பழங்குடியின மக்களின் மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
இந்தியன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் இவருடைய முன்னாள் மாணவர். அவரைப் போன்று இன்று புகழ் பெற்று விளங்கும் பலரும் இவரிடம் பயின்றவர்கள். ஐஐடி வேலையை ராஜினாமா செய்ததும் மத்தியபிரதேசத்தில் உள்ள பேட்டுல் மற்றும் ஓசங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடி கிராமங்களில் முதலில் பணி செய்ய ஆரம்பித்த அவர் தன் இருப்பிடமாக ஒரு சின்னஞ் சிறு குடிசையை அமைத்துக்கொண்டார். கொசாமு என்கிற அடிப்படை வசதி இல்லாத அந்த கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்.
அங்குள்ள பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இருக்கிறார். கிராமவாசிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கி மரம் நடுவதற்கு ஊக்கப்படுத்துகிறார். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர மக்கள் பாடுபட வேண்டும். இங்கு அறிவை பெருக்குவதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தான் மக்கள் தங்கள் குறிக்கோளுடன் இருக்கிறார்களே தவிர கஷ்டப்படும் ஏழை மக்களின் துயர் துடைக்க யாரும் முன்வருவதில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய பின்புலம் பற்றி மக்கள் முதலில் அறியவில்லை. ஒரு தேர்தலின் போது தான் இவரைப் பற்றிய உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிய வந்து இருக்கிறது. அது வரை மக்களோடு மக்களாக ஒரு எளிய மனிதனாக வாழ்ந்தார். தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமலே வாழ்ந்து வந்தார். டெல்லியில் பேராசிரியராக அவர் பணிபுரியும் போது கிராமப்புற மக்கள் படும் கஷ்டங்கள் குறித்துத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறார். மாணவர்களிடம் இது குறித்த அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். விவசாயிகளின் துயர் துடைக்க தானே களத்தில் இறங்குவது என முடிவு செய்த அவர் அன்றே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.
விவசாயம் செய்ய இயலாத மக்களுக்கு விதை நெல்லை இலவசமாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரைப்பற்றி தெரிந்து கொண்ட மக்கள் அவரை வீட்டிற்குப் போகும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், சாகர் அதை மறுத்து விட்டார். அவரது தந்தை ஐ.ஆர்.எஸ். அலுவலராக இருந்தவர். 2015ம் ஆண்டில் அவர் இறந்துவிட்டார். தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். அவரது தம்பி டெல்லி ஐஐடியில் பேராசிரியர். 69 வயதாகும் அவர், தினசரி 60 கிலோமீட்டர் கிராமங்கள்தோறும் சோர்வில்லாமல் பயணித்து மக்கள் பணியாற்றி வருகிறார்.
"கல்வி என்பது சக மனிதரின் துன்பத்தைப் போக்குவது மற்றும் எளிய மக்களுக்குச் சேவை செய்வதே" என சாகர் அடிக்கடி கூறுவதுண்டு. "தொழில்நுட்ப வளர்ச்சியோ, பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியோ ஏழைகளைச் சென்றடைவதில்லை. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் மூலமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும்" என்கிறார் உறுதியுடனும்,அழுத்தமுடனும்.
எளியவர்களைக் காப்போம் என வெற்றுக் கூச்சலிடுவோர் மத்தியில் சாகர் ஒரு மகத்தான மனிதர். அவரிடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு சைக்கிள், மூன்று ஜோடி உடைகள் மட்டுமே. கல்வி என்பது வியாபாரப் பொருளாக மாறிவிட்ட நிலையில், இம்மாதிரியான மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் தான். ஆனாலும் ஏழைகளை, வறுமையில் வாடுபவர்களை நாம் நினைத்தால் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு சாகரின் வாழ்க்கையே நமக்கான சாட்சி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu