உரத்தட்டுப்பாடு பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி?
பைல் படம்
இதுபோன்றே பல முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார்கள். இடையில் சில மாதங்கள் தமிழகத்திற்கு மிகுந்த சிரமத்திற்கிடையே உரத்தை வழங்கியதை அப்போதைய பத்திரிகை செய்திகள் சிலாகித்து பாராட்டி வந்தன. உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் மறியலில் ஈடுபட்ட காலமெல்லாம் இருந்தது.
இதை வைத்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் போட்டி அரசியல் செய்தன. ஏன் இந்த நிலை என்று அப்போது பலரும் யோசித்ததுண்டு. உர உற்பத்தியை பெருக்கவோ, புதிய தொழிற்சாலைகளை நிறுவவோ முடியாதா என்று வியந்ததுண்டு. ஆனால், தற்போது எந்த முதல்வரும் அப்படிப்பட்ட கோரிக்கையை வைத்து கடிதங்கள் எழுதுவதில்லை. விவசாயிகள் யாரும் போராடுவதில்லை. எல்லோருக்கும், தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கிறது.
விவசாயிகள் உர மையங்களில் முன்னிரவிலிருந்து காத்திருப்பதில்லை. இத்தனைக்கும், உர உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறவில்லை. புதிய உரத் தொழிற்சாலைகளும் நிறுவப்படவில்லை. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?
பிரதமர் மோடி, அமெரிக்காவாழ் இந்தியர்கள் நடுவில் ஆற்றிய உரையை கேட்கும் வரை இந்திய விவசாயிகள் பலருக்கும் இது புரியாமலேயே இருந்தது. மோடி கூறியதை வைத்து நடந்ததை விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதாவது உரத்தொழிற்சாலையிலிருந்து உற்பத்தியாகி வரும் யூரியா, வேளாண் கூட்டுறவு மையங்களுக்கு செல்லாமல் வேறு தொழில்களுக்கு சென்று கொண்டிருந்தது. அதாவது, யூரியாவை மூலதனமாக கொண்ட தொழிற்சாலைகளுக்கு சென்றதால் நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உரத் தொழிற்சாலைகள் மானியத்தையும் பெற்று, உரத்தையும் வழங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தடுக்க, யூரியாவில் வேப்பெண்ணெய் கலக்கும்படி உத்தரவிட்டார் பிரதமர். அதோடு, வேப்பெண்ணெய் கலந்த உரத்தை மட்டும் வாங்கும்படி விவசாயிகள் பணிக்கப்பட்டனர். (டி.வி.க்களில் இதுபற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்). ஏனெனில், வேப்பெண்ணெய் கலந்த யூரியாவை வேறு தொழில்களில் பயன்படுத்த முடியாது. விளைவு, நாடு முழுவதும் தட்டுப்பாடற்ற யூரியா விநியோகம் நடந்தது.
வேப்பெண்ணெய் கலப்பினால், உற்பத்தி சுமார் 7% வரை எட்டியது. வேப்பெண்ணெய் வியாபாரமும் பெருகியது. வேப்பெண்ணெய் ஒரு சிறந்த பூச்சிக்கொல்லி என்பது ஆண்டாண்டு காலமாக இந்த பூமி கண்டுவரும் உண்மை. இந்த நடவடிக்கை மூலம், அரசுக்கு சுமார் 80,000 கோடி ரூபாய் வீணாவது தடுக்கப்பட்டது.
இந்த அரசின் நடவடிக்கைகளை கவனித்து வரும் நிபுணர்களுக்கே பல விஷயங்கள் புரியாமல் இருக்கும் போது, பாமர மக்களுக்கு இதுபோன்ற நுண்ணிய விஷயங்கள் எங்கிருந்து விளங்கும்? இதை விளக்க பிரதமரின் உரை தேவைப்பட்டது, அதுவும் அமெரிக்காவிலிருந்து.
மத்திய மோடி அரசின் மிகப்பெரிய பின்னடைவு, தங்கள் ஆட்சியைப் பற்றிய புரிந்துணர்வை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லாமையே. அதனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சமூக அவலங்களை, ஆட்சியை எதிர்ப்பவர்கள் பெரிதாக ஜோடித்து, நாடே தத்தளிப்பது போல எளிதில் சித்தரிக்க முடிகிறது. இது போன்ற நல்ல செய்திகளை பா.ஜ.க-வின் ஐ.டி., விங்க் கூட வெளிப்படுத்தாதது வருத்தமான விஷயம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu