29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?

29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
X

நக்சல் தேடுதல் வேட்டையில் CRPF வீரர்கள். (கோப்பு படம்)

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பா.ஜ.க ஆட்சியில் `என்கவுன்ட்டர்கள்’ சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கைக் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 29 பேர் கொல்லப்பட்டிருக்கும் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மாவோயிஸ்ட்டுகள். இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கையில் இயங்கி வருகின்றனர். மாவோயிஸ்ட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, `மக்கள் யுத்தக்குழு’, `மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர்’ ஆகிய பெயர்களில் செயல்பட்டுவந்த நக்சலைட் இயக்கங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் ஒரு கட்சியைத் தோற்றுவித்தனர். அதையும் அரசு தடைசெய்தது.

இருப்பினும், இன்றளவும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகள் தீவிரமாகவே இருந்து வருகின்றன. அவ்வப்போது காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடைபெறும் மோதல்களில் இரு தரப்பிலும் காயங்களும் உயிரிழப்புகளும் நேர்வதுண்டு. அந்த வகையில், 2010-ம் ஆண்டு தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 2021-ம் ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பீஜபூரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் உயிரிழந்தனர். அதே ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், தனோரா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும், மகாராஷ்டிரா போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 26 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில்தான் கடந்த 16-ம் தேதி சத்தீஸ்கர், கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 29 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்திருப்பது கடும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “கான்கேர் பகுதியில், 35 முதல் 40 பேரை உள்ளடக்கிய ஆயுதமேந்திய மாவோயிஸ்ட்டுகளின் ஒரு படைப்பிரிவு முகாமிட்டிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தை நாங்கள் சுற்றிவளைத்தோம். அப்போது, பி.எஸ்.எஃப் வீரர்கள், சத்தீஸ்கர் போலீஸார்மீது மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

அதில் ஒரு வீரர் காயமடைந்தார். இதையடுத்து நாங்கள் நடத்திய பதில் தாக்குதலில், மாவோயிஸ்ட்டுகளின் முக்கியத் தலைவர்களான சங்கர் ராவ், லலிதா மாத்வி உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஏகே-47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை அதிக அளவில் கைப்பற்றியிருக்கிறோம். காயங்களுடன் தப்பிச் சென்ற மாவோயிஸ்ட்டுகளைத் தீவிரமாகத் தேடிவருகிறோம். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 79 நக்சலைட்டுகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். அதில், இந்தத் தாக்குதலே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய மிகப்பெரிய அட்டாக்” என்றனர்.

இது குறித்துப் பேசிய சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க முதல்வர் விஷ்ணு தேவ் சாய், ``கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டர் ஒரு வரலாற்று வெற்றி. மாவோயிஸ்ட்டுகளுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அவர்கள் பஸ்தாரில் தேர்தலைப் புறக்கணிக்கவும், தேர்தல் நடவடிக்கைகளைத் தடுக்கவும் சதி செய்து வருகின்றனர். ஆனால், மாவோயிஸ்ட்டுகளின் முயற்சிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் முறியடித்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, ``நக்சலிசத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் மோடி அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. சத்தீஸ்கரில் பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து, 80-க்கும் மேற்பட்ட நக்சல்கள் ஒழிக்கப்பட்டிருக்கின்றனர். 125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள், மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு நக்சல்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. “நாட்டில் எல்.டபிள்யூ.இ (Left Wing Extremism) வன்முறை குறைந்து வருகிறது. ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் கடந்த 2010-ம் ஆண்டு, 96 மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் 45 மாவட்டங்களில் மட்டுமே வன்முறைகள் பதிவாகியிருக்கின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில், எல்.டபிள்யூ.இ பகுதிகளுக்கு இரண்டு குறிப்பிட்ட திட்டங்களின்கீழ் ரூ.10,000 கோடி செலவில் 9,356 கி.மீ தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. எல்.டபிள்யூ.இ-யால் பாதிக்கப்பட்ட 90 மாவட்டங்களில் தலா மூன்று கி.மீ இடைவெளியில் 4,903 தபால் நிலையங்களும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

தேர்தல் நேரத்தில் நிகழ்ந்திருக்கும் இந்தச் சம்பவம், வாக்குப்பதிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil