இமாச்சல் பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?

இமாச்சல் பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?
X

இமாச்சல் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட சுக்விந்தர்சிங் சுகு

இந்தியாவில் 6வது மாநிலமாக இமாச்சல பிரதேசத்திலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகிறது

இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்த காங்., கட்சி இமாச்சல் பிரதேசத்திலும் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

இமாச்சல் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சுக்விந்தர்சிங் சுகு, இமாச்சல் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இமாச்சல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர்சிங் சுகு முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிப்படி இமாச்சல் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்று சுக்விந்தர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த இரு வாரங்களுக்குள் இமாச்சல் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது; பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும்; நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக இருந்தது.

ஆனால், அதையெல்லாம் முறியடித்து இராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் இணையவுள்ளதுது.

இமாச்சல் பிரதேச அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், இமாச்சல் பிரதேசத்தில் இதுவரை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.

தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வாக்குறுதி அளித்த எந்த கட்சியும் அதை செயல்படுத்துவதில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ஆம் தேதி மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது? பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்து விட்டது. இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!