அமெரிக்காவும்.... இந்தியாவும் ‘‘ஹார்வர்டு நாட்கள்’’ படித்தீர்களா...?

அமெரிக்காவும்.... இந்தியாவும்   ‘‘ஹார்வர்டு நாட்கள்’’ படித்தீர்களா...?
X

ஹார்வர்ட் நாட்கள் நூல் 

அமெரிக்காவையும், இந்தியாவையும் பற்றி முழுமையாக அறிய ஹார்வர்டு நாட்கள் என்ற புத்தகத்தை படியுங்கள்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏஎஸ்., அதிகாரியான செல்வம், தனது அனுபவம் குறித்து ‘ஹார்வர்டு நாட்கள்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை படித்த ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., எம்.எஸ்.முத்துசாமி, ஐபிஎஸ் வியந்து போய் அழகிய விமர்சனம் வழங்கி உள்ளார். இதனை அப்படியே நமது வாசகர்களுக்கு தருகிறோம்.

இரா. செல்வம், ஐஏஎஸ் எழுதிய ‘ஹார்வர்டு நாட்கள்’ என்னும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 167 பக்கங்கள்கொண்ட இப்புத்தகத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விலை 200 ரூபாய். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுள் இதுவும் ஒன்று. மிகவும் எளிமையான நடையில், ஆர்வத்தைத்தூண்டும் விதத்தில், ஆங்காங்கே புள்ளி விவரங்களுடன் எழுதப்பட்ட, மிகவும் சுவராஸ்யமான புத்தகம் இது.


கண்ணாடி இல்லாமல் படிக்கக் கூடிய எழுத்துரு அளவு(font size), எளிமையாகப் புரியும் விதத்தில் சின்னச்சின்ன பத்திகள்(paragraphing), தேவைப்படும் இடங்களில் படங்கள்(photos), கூறியது கூறல் இல்லாமை, நேர்த்தியான அட்டை வடிவமைப்பு, என இப்புத்தகத்திற்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன.கற்பனை என்பதற்கு இந்தப்புத்தகத்தில் இடமே இல்லை. அனைத்தும், உள்ளது உள்ளபடியே பகிரப்பட்டுள்ளது.

சாலைகள், பள்ளிகள், நூலகங்கள், பொது மருத்துவம், நிலம் பதிவு செய்தல், தண்ணீர் பங்கீடு, வேளாண்மை, விவசாயிகள் நிலை, தொழில் நுட்பங்கள், நகரங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒப்பிடப்பட்டு விளக்கப்பட்டு, விவரிக்கப்படும் முறை, நம்மை மிகவும் சிந்திக்கத்தூண்டுகிறது.

அமெரிக்காவின் வளர்ச்சிக்கும், அமெரிக்க அரசின் திறனுக்கும், அதன் கலாசார விழுமியங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், மனித குல மேம்பாடு ஒன்றே அமெரிக்காவின் நோக்கம் என்பதாலும், அமெரிக்காவில் நிர்வாகத் துல்லியம் சாத்தியப்படுகிறது என்பதை நிறைய ஆதாரங்களுடன் இப்புத்தகம் நிரூபணம் செய்கிறது.

நம்மை நாமே குறை கூறுவது நோக்கமல்ல, ஆனால், அறிவியல்பூர்வ சிந்தனை இன்னும் அதிகம் நமக்குத் தேவை என்பதை உணர்த்துவதே, இப்புத்தகத்தின் ஆசிரியரின் நோக்கம். இந்தியர்களின் ரேசன் அட்டை போன்றது, அமெரிக்கர்களின் ஓட்டுனர் உரிமம். நல்ல சாலைப்பராமரிப்பு, அமெரிக்கர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. இந்தியாவில், அலுவலகம் செல்லும் ஒருவர், ஒரு ஆண்டுக்கு, முப்பது நாட்களை சாலைகளிலேயே கழிக்க வேண்டியுள்ளது.

அமெரிக்காவில், அட்மிஷன் என்ற பெயரில் பள்ளிகளில் யாரும் அலைக்கழிக்கப்படுவதில்லை. ஆனால், நம்நாட்டில், பிள்ளைகளின் அட்மிஷனுக்காக, பெற்றோர்கள் ஐஏஎஸ் நேர்முகத்தேர்வுக்கு படிப்பதைப்போல பயப்படுகிறோம். இந்தியக்கல்வி வெறும் வயிற்றுத் தேடலுக்கானதாக சுருங்கி விட்டதே, என நூலாசிரியர் மனம் வெதும்புகிறார்.

அமெரிக்க நாடுகளில், சுகாதாரத்திற்காக தனிமனிதனுக்கு இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ஏழு லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த நிலை இல்லை. அமெரிக்காவின் சுற்றுலாத்தலங்களை ஒப்பிடும் போது, இந்திய சுற்றுலாத்தலங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால், அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் பத்தில் ஒரு பங்கினரே, இந்தியாவுக்கு வருகின்றனர்.

அமெரிக்காவில், காப்பீடு இல்லாமல் நிலம் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது. தவறான பத்திரப்பதிவுக்கு அரசே இழப்பீடு வழங்கும். ஆனால், இந்தியாவில் நிலுவையிலுள்ள நிலம் சார்ந்த வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 324 வருடங்கள் ஆகும் என நிதிஆயோக் கூறுகிறது என்பது போன்ற பல செய்திகள் அவசியம் படிக்க வேண்டியவை.

இரா.செல்வம், ஐஏஎஸ் எழுதிய இப்புத்தகத்தை வாசிக்கும்போது, அவரது கையைப்பற்றிக் கொண்டு, அவருடனே அமெரிக்காவைச் சுற்றி வந்து விட்டதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. நாடு நன்றாக இருக்கவேண்டும், இந்திய மக்கள் மாண்புடன் வாழ வேண்டும் என ஏங்கித்தவிக்கும், ஒவ்வொரு தனிமனிதனும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம் இது.

இமாசலப்பிரதேசம்- லாகுல் ஸ்பிட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவராகப் பணியாற்றிய அனுபவங்களை இந்நூலாசிரியர் தனிப் புத்தகமே எழுதலாம். இப்புத்தகத்தில் உள்ள அவரது ஒவ்வொரு அனுபவங்களும் நமக்கு மயிர்கூச்செரிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்திய ஆட்சிப்பணியானது, இந்திய சேவைப்பணியாக மாற வேண்டும் என்கிற நூலாசிரியர் இரா.செல்வம், ஐஏஎஸ். அவருக்கு ஒவ்வொரு வாசகனும் ராயல் சல்யூட் அடிக்க வேண்டும்.

-அன்புடன்,

எம்.எஸ்.முத்துசாமி, ஐபிஎஸ்.

காவல்துறை தலைவர் (ஓய்வு)

Tags

Next Story
சீறுநீரக பிரச்சனை இல்லாம ஆரோக்கியமா இருக்க உங்களுக்காக நச்சுன்னு நாலு டிப்ஸ்!..