விண்வெளிக்கு பிரதமர் மோடியை அனுப்புவது பெருமை: சோம்நாத் தகவல்..!
ஐஎஸ்ஆர்ஓ இயக்குனர் சோம்நாத் -பிரதமர் மோடி (கோப்பு படம்)
``ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பிருக்கிறது." எனவும் சோம்நாத் தெரிவித்துள்ளார். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரமாக பணியாற்றி வருகிறது. ரூ.9 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படும் இந்த திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தத் திட்டம், 2025-ம் ஆண்டு, 4 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்களை பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025-ம் ஆண்டு செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பிருக்கிறது.
பிரதமர் மோடிக்கு பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், ககன்யான் விண்வெளித் திட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் என்பது, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பேட்டி குறித்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், ``தாயின் வயிற்றிலிருந்து பிறக்காத பரமாத்மாவான பிரதமர் மோடி, விண்வெளிக்குச் செல்வதற்கு முன், மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதல் போக்கு காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இதுவரை அங்கு செல்லாததை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu