இந்தியாவில் வேலை பெறுவது 51% பட்டதாரிகள் மட்டுமே..!
பட்டதாரிகள் -கோப்பு படம்
படித்த பட்டதாரிகளில் இருவரில் ஒருவர், வேலை வாய்ப்பைப் பெறுவதில்லை. நவீன பொருளாதாரத்துக்கேற்ப போதிய திறன் மேம்பாட்டை அடையாததே இதற்கு காரணம் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 65% மக்கள் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ள நிலையில், 51.25% பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் என்.எஸ்.எஸ்.ஓ. எனும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் அளித்த, 2011-12ல் இந்தியாவில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலை குறித்த அறிக்கையில், 15-59 வயதுடையவர்களில், சுமார் 2.2 சதவீதம் பேர் முறையான தொழிற்பயிற்சி பெற்றதாகவும், 8.6 சதவீதம் பேர் முறைசாரா தொழிற்பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் 2023 - 2024ஆம் ஆண்டு அறிக்கையில் இவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
எனினும் 34% ஆக இருந்த இந்த விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து தற்போது 51.25%ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு, நாட்டில் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சியில் உள்ள சவால்களையும், பின்னடைவையும் கணக்கிடுகிறது.
அதாவது, திறன் மேம்பாடு பற்றிய பொதுக்கருத்து, கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்களுக்கான மாற்றுவழி, மத்திய அரசின் மிதமிஞ்சிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நிகழ்ச்சிகள், பலவகைத் தரத்தில் சான்றிதழ் வழங்குவதால் வேலை வழங்குபவர்களிடையே ஏற்படும் குழப்பம், பயிற்சியற்ற ஆசிரியர்கள், தேவைக்கும் வழங்குவதற்கும் இடையேயான பொருந்தாத்தன்மை, திறன் மற்றும் உயர்கல்வி தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு இடையிலான வரையறை உள்ளிட்டவை குறித்தும் கணக்கிடப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டு பாடத்திட்டத்தில் போதாமை, பெண் ஊழியர்கள் பற்றாக்குறை, குறைந்த உற்பத்தி மற்றும் சிறப்பு திறன்கள் தேவைப்படாத ஒழுங்கமைக்கப்படாத துறையின் வேலைவாய்ப்புகள், புத்தாக்கத் தொழில்களுக்காக நிதி பற்றாக்குறை போன்றவற்றில் உள்ள சவால்கள் குறித்தும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக அறிக்கை விவரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu