கர்நாடக தேர்தலில் வென்ற விவசாயி மகன்
பைல் படம்
கர்நாடக மாநில விவசாய சங்க தலைவரான மறைந்த கே. எஸ்.புட்டண்ணய்யாவை அங்குள்ள விவசாயிகளுக்கு நன்கு தெரியும். மாண்டியா பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற மறைந்த புட்டண்ணய்யா, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயங்களை ஆதரித்தவர் ஆவார். பச்சை துண்டு அணிந்து கம்பீரமாக கர்நாடகம் முழுவதும் பவனி வந்த புட்டண்ணய்யாவின் மறைவிற்குப் பிறகு அவரது மகனும், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் கோலோச்சி வந்த கிவினிக்ஸ் டெக்னாலஜிஸ் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனருமான தர்ஷன் புட்டண்ணய்யா களத்திற்கு வந்தார்.
20 லட்சம் பதிவு செய்த உறுப்பினர்களைக் கொண்டு, மேலுகோட், மாண்டியா, விராஜ் பேட்டை, சித்திரதுர்கா, பெல் தங்கடி, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த புட்டண்ணய்யா தலைமையிலான கன்னட ராஜ்யரய்தா சங்கத்தின் அரசியல் பிரிவு தான் சர்வோதய கர்நாடக கட்சியாகும். அந்த சர்வோதய கர்நாடக கட்சியின் சார்பில் கடந்த பத்தாம் தேதி நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் ஆதரவுடன் மேலுகோட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் தர்ஷன் புட்டண்ணய்யா.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இதே மேலுகோட் தொகுதியில், யோகேந்திர யாதவ் தலைமையிலான ஸ்வராஜ் இந்தியா கட்சியின் சார்பில் போட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா தளத்தின் புட்ட ராஜிடம் தோல்வி அடைந்திருந்தார். இந்தத் தேர்தலில் யாரிடம் தோற்றாரோ அதே புட்ட ராஜுவை வீழ்த்தி வெற்றி கண்டிருக்கிறார் தர்ஷன்.
மறைந்த கர்நாடகத்தின் மாபெரும் விவசாய சங்க தலைவரான பேராசிரியர் எம்.டி.நஞ்சுண்ட சாமியின் மகன்களான பச்சே நஞ்சுண்ட சாமி மற்றும் சுக்கி நஞ்சுண்ட சாமி ஆகியோரின் ஆதரவு இல்லாமலேயே வெற்றிக் கனியை பறித்திருக்கும் தர்ஷன், மொத்த கருநாடகத்தையும் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
45 வயது நிரம்பப் பெற்ற தர்ஷன் புட்டண்ணய்யா, இனி தன்னுடைய மென்பொருள் நிறுவனத்தை நடத்துவதற்கு தான் அமெரிக்கா போகப் போவதில்லை என்றும், மாண்டியாவை மையப்படுத்தி விவசாயிகளுக்காக போராடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். தன் தந்தையைப் போல காவிரி விவகாரத்திலும் நடுநிலைமை வகித்தால், தர்ஷன் புட்டண்ணய்யா வை கம்பம் பள்ளத்தாக்கிற்கு அழைத்து வந்து கௌரவப்படுத்துவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் அறிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu