விவசாயிகள் போராட்டம் எதிரொலி : டெல்லி நிபுணர்கள் கூட்டம் ரத்து..!

விவசாயிகள் போராட்டம் எதிரொலி :  டெல்லி நிபுணர்கள் கூட்டம் ரத்து..!
X

முல்லை பெரியாறு அணை

டெல்லியில் இன்று நடக்க இருந்த நிபுணர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு வரைவு அறிக்கை தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியது. இந்த வரைவு அறிக்கை பற்றி ஆய்வு நடத்த இன்று டெல்லியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.

இதனை அறிந்த தமிழக விவசாயிகள் கொந்தளித்தனர். இந்த திட்டத்தை நிறுத்தக்கோரியும், கேரள அரசினை கண்டித்தும் குமுளியை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று நடத்தினர். லோயர்கேம்ப்பிலேயே தமிழக போலீசார் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தினாலும், லோயர்கேம்ப்பில் திரண்டிருந்த விவசாயிகள் காட்டிய உணர்வலைகளை அத்தனை வகையான ஊடக நிருபர்களும் (உண்மையில் நிபுணர்கள் என்று தான் இவர்களை பாராட்ட வேண்டும்) மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர். கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் இப்பிரச்னை விவாதப்பொருளாக மாறிப்போனது.

தமிழக விவசாயிகளின் உக்கிரமான போராட்டம் நியாயமானதே என பலரும் கருத்து தெரிவித்தனர். இதனை அறிந்து கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம், டெல்லியில் இன்று நடைபெற இருந்த நிபுணர்கள் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. தவிர தமிழக அரசின் அனுமதி இன்றி பெரியாறு அணைக்கு மாற்றாக கேரளாவால் புதிய அணை கட்ட முடியாது எனவும் மத்திய அரசு உறுதி கூறி உள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி மட்டுமின்றி, கேரளாவின் திட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இதனை விட சிறப்பம்சம், தமிழக அரசு போராட்டம் நடத்திய விவசாயிகளை ஒரு குழந்தையை போல் பக்குமாக கையாண்டது. விவசாயிகள் உக்கிரமான மனநிலையில் இருக்கும் போது, ஏதாவது அழுத்தமாக செய்யப்போக விளைவுகள் விபரீதமாகி விட்டால் சிக்கலாகி விடும் என தமிழக அரசும், தேனி மாவட்ட போலீசாரும் லோயர்கேம்ப்பில் போராட்டம் நடத்திய விவசாயிகளை பக்குவமாக கையாண்ட விதம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள பத்திரிக்கைகள் கூட தங்கள் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் என்றாலும், அதன் உண்மைத்தன்மை மாறாமல் செய்திகளை வெளியிட்டு இருப்பதை விவசாயிகளே மனம் உவந்து பாராட்டி உள்ளனர். தவிர கேரள ஊடகங்கள் சில, இப்பிரச்னை பற்றி தங்கள் ஊடகங்களில் நடைபெறும் நேரடி விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்க வாருங்கள் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதன் மூலம் கேரள அரசின் கருத்தை மட்டும் இதுவரை கேட்டு வந்த, வெளியிட்டு வந்த கேரள ஊடகங்கள், தற்போது தமிழக மக்களின் மனநிலை, பிரச்னையின் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் என விவசாயிகள் பெருமிதப்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!