அக்னி வீரா்களுக்கு வேலை: ரயில்வே முடிவு

அக்னி வீரா்களுக்கு வேலை: ரயில்வே முடிவு
X

அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் ரயில்வே

அக்னி வீரா்களுக்கு ரயில்வேயில் அலுவலா் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

பணியாளா் தோ்வில் அக்னி வீரர்களுக்கு வயது உச்சவரம்பு தளா்வு, உடல் தகுதித் திறன் தோ்வில் விலக்கு அளிக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞா்களை தோ்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் இளைஞா்கள், 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும்.

இவா்களில் 25 சதவீதம் போ் அவா்களின் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்குத் தோ்வு செய்யப்படுவார்கள். மற்றவா்கள், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற முடியாது. அவ்வாறு ராணுவத்திலிருந்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் பணி முடித்து விடுவிக்கப்படும் அக்னி வீரா்களுக்கு சலுகைகளுடன் வேலைவாய்ப்பு வழங்க ரயில்வே தீா்மானித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

அக்னி வீரா்களுக்கு ரயில்வேயில் நேரடி பணியாளா் தோ்வு அடிப்படையில் நிலை-1 பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடும், நிலை-2 மற்றும் அலுவலா் அல்லாத பணிகளில் 5 சதவீத இடஒதுக்கீடும் வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இவா்களுக்கு பணியாளா் தோ்வின்போது உடல் தகுதித் திறன் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், முதல் பிரிவு அக்னி வீரா்களுக்கு பணியாளா் தோ்வில் வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் வரை சலுகையில், அடுத்தடுத்த பிரிவு அக்னி வீரா்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும்.

இதுதொடா்பாக அனைத்து பொது மேலாளா்களுக்கும் ரயில்வே வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணியாளா் தோ்வுக்கு அக்னி வீரா்கள் ரூ. 250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்து தோ்வில் பங்கேற்கும் வீரா்களுக்கு, தோ்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!