ஐந்து மாநிலத் தேர்தல் களம்: யாருக்கு வெற்றி வாய்ப்பு ?

ஐந்து மாநிலத் தேர்தல் களம்:  யாருக்கு வெற்றி வாய்ப்பு ?
X

பைல் படம்

தெலங்கானா , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.

மக்களவைத் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த தேர்தல் அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. இந்த மாநிலங்களின் தற்போதைய நிலை, தேர்தல்களம்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு…? விரிவாக பார்க்கலாம்

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்ளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இதன்படி, வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், சத்திஸ்கரில் நவம்பர் 7, 17 என 2 கட்டங்களாகவும், ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதியும், தெலங்கானாவில் 30ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகின்றன.

தெலங்கானா:

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், தென்னிந்திய மாநிலமான தெலங்கானா கடந்த 2014ம் ஆண்டு உருவானது. மாநிலம் கோரி பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி. தற்போது, தேசிய அரசியலில் கவனம் ஈர்க்கும் வகையில், பாரத் ராஷ்ட்ரிய சமிதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் முதலமைச்சராக உள்ளார். அவரின் பத்தாண்டு கால ஆட்சி மீதான மக்கள் மனநிலையின் வெளிப்பாடாக இந்த தேர்தல் முடிவு அமையும் என்கிறார்கள்.

குறிப்பாக, மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முயற்சிக்கும் பாஜக, தெலங்கானாவில் சந்திரசேகரராவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது. ஆனால், ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு காங்கிரஸ் கடும் போட்டியாக இருப்பதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்து பார்ப்பதாக சொல்லும் பி.ஆர்.எஸ் கட்சியினர், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். ஆனால், I.N.D.I.A கூட்டணியின் தேர்தல் வியூகம், பாஜகவின் அதிரடி என இரண்டையும் சமாளித்து மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பாரா சந்திரசேகர ராவ்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் கடந்த 2018ல் பி.ஆர்.எஸ் 96 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 7, பாஜக 3 இடங்களிலும் வென்றன. இதே நிலை தொடருமா? கர்நாடக தேர்தல் வியூகத்தை முன்மாதிரியாக கொண்டு காங்கிரஸ் வெல்லுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கலாம்.

தாமரையிடமிருந்து 'கை'ப்பற்றுமா காங்கிரஸ்?

மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 4 முறை இங்கு பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க முனைகிறது. இதற்காக, பல்வேறு புது வியூகங்களை அமைத்து செயல்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, மத்திய அமைச்சர்கள் மூவர் உள்ளிட்ட 7 எம்.பி.க்களையும் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது.

புதுமுகங்கள், தொகுதிவாரியான செல்வாக்கு மிக்கவர்கள், தேர்தலுக்கு பின்னர் புதிய முதலமைச்சர் தேர்வு என தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில், தொடர் ஆட்சியினால், ஆட்சிக்கு எதிராக மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மனநிலை, உட்கட்சிப் பூசல் உள்ளிட்டவற்றை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைத் தட்டிப் பறிக்க காங்கிரஸ் கட்சியும் வியூகம் வகுத்து வருகிறது.

குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ல் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் ,ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் வென்றது. அக்கட்சித் தலைவர் கமல்நாத் முதலமைச்சரானார். ஆனால், அக்கட்சியின் இளம் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் கலகத்தால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, ஜோதிராதித்யா ஆதரவுடன் பாஜகவே மீண்டும் ஆட்சியமைத்தது.

இது போல் மீண்டும் நடந்து விடக்கூடாது, முன்பு கை நழுவியதை, தற்போது உறுதியாக கைப்பற்றி விட வேண்டும். அதற்கு, பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வருவதும் அக்கட்சியினருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது என்கிறார்கள்.

சத்தீஸ்கரில் யார் ஆதிக்கம்?

கடந்த 2000-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலம் உருவானது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு 2003ம் ஆண்டு முதல் 2018 வரை பாஜகவின் ஆட்சி நடைபெற்றது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பூபேஷ் பாகல் முதலமைச்சரானார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களில் இங்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதுவே ஆளும் அரசுக்கும் சவாலாக உள்ளது. ஆனால், பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் யார் மன்னர்?

கடந்த 2018ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றது. மூத்த தலைவர் அசோக் கெலாட் முதலமைச்சரானார். இளம் தலைவரான சச்சின் பைலட் முரண்டு பிடித்ததால், மத்திய பிரதேசத்தைப் போல இங்கும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைக்கும் என்கிற கருத்து அவ்வப்போது வந்தாலும், சச்சின் சமாதானம் அடைந்து, 5 ஆண்டு கால ஆட்சியை காங்கிரஸ் நிறைவு செய்கிறது. ஆனாலும், 5 ஆண்டுகளாக முதலமைச்சர் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையிலான உட்கட்சி உரசல்கள், ஆளும் கட்சியினரே குற்றம் சாட்டியது உள்ளிட்டவை மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதை பயன்படுத்தி பாஜக ஆட்சியமைக்க வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜே சிந்தியாவுக்கும் மீண்டும் முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. இதனால், இம்முறை இரு கட்சிகளும் கடும் போட்டியை சந்திக்கின்றன. ராஜஸ்தான் தேர்தல் குறித்த பல்வேறு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளும் இதை வெளிப்படுத்தி வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சார யுக்தி, வேட்பாளர்கள், தலைவர்களின் அணுகுமுறைகளுக்கு ஏற்ப வெற்றி தீர்மானிக்கப்படும் என்கிறார்கள். மொத்தம் 200 தொகுதிகள் கொண்ட இங்கு இரு கட்சிகளில் யார் பெரும்பான்மை பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடைசியில் இழந்தது..

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் M.N.F என்கிற மிசோ தேசிய முன்னணியின் சோரம் தங்கா முதலமைச்சராக உள்ளார். கடந்த 2018ல் நடைபெற்ற தேர்தலில் எம்என்எப் 26, காங்கிரஸ் 5, பாஜக 1, பிற கட்சிகளுக்கு 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த 1986ம் ஆண்டு முதல் இங்கு காங்கிரஸ் அல்லது எம்என்எப் என இருகட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

அந்த வகையில் இங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்கிற நம்பிக்கை அக்கட்சியினரிடத்தில் உள்ளது. இதை மாற்றிக் காட்டுவோம் என்று பா.ஜ.கவும் முனைப்பு காட்டுகிறது. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் இங்குதான் கடைசியாக ஆட்சியை இழந்தது. ஆகையால், எம்.என்.எப் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நேரடிப் போட்டியில் பாஜக Vs காங்கிரஸ்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக - காங்கிரஸ் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதன் வெற்றி தோல்வி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, 5 மாநிலத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக 1 மாநிலத்திலும் காங்கிரஸ் 2 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும் 5 மாநிலங்களிலும் நேரடிப் போட்டியாளராக களத்தில் உள்ளது. பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் மக்கள் முடிவு என்னவாக இருக்கும் என்கிற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஏனெனில் இந்த 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஓபிசி இட ஒதுக்கீடு, சாதி வாரி கணக்கெடுப்பு, தமிழ்நாட்டைப்போன்ற மக்கள் நலத்திட்ட அறிவிப்புகள், இலவச அறிவிப்புகள் என தேர்தல் களத்திலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இலவசங்களை எதிர்ப்பதாக சொல்லும் பாஜக இந்த தேர்தலில் தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மாநிலவாரியாக தேர்தல் வியூகத்தையும் பாஜக அமைத்து வருகிறது. மேலும், தலைவர்களின் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறைகள் என ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெறும் தேர்தலில், யார் வெல்லப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கேற்ப தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முன் கூட்டியே இறங்கி விட்டது பாஜக. இதை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!