தேர்தல் அறிவிக்கவுள்ள நிலையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயல்
ராஜினாமா செய்துள்ள தேர்தல் ஆணையர் அருண் கோயல்
நாடாளுமன்ற தேர்தல் எப்போது என்ற அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் முதல் 3 பதவிகள் மிகவும் முக்கியமானவையாகும். தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் பதவிகள் முக்கியமானவை.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரும் செயல்பட்டு வந்தனர்.
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசில் பணியாற்றி வந்தார்.
62 வயதான அருண் கோயலின் மத்திய அரசு பதவி காலம் வரும் 2022 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், மத்திய அரசின் பதவிகாலம் நிறைவடையும் முன்பே கடந்த 2022 நவம்பர் 18ம் தேதி கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் இருந்து அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்றார்.
விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை குடியரசு தலைவர் முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து 2022 நவம்பர் 21 இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றார்.
மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அருண் கோயல் நியமனத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என மத்திய அரசை சாடியது.
"ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பெயர்களின் பட்டியலில் இருந்து நான்கு பெயர்களை சட்ட அமைச்சர் எடுக்கிறார்... கோப்பு நவம்பர் 18 அன்று போடப்பட்டது; அதே நாளில் நகர்கிறது. பிரதமர் கூட அதே நாளில் பெயரை பரிந்துரைக்கிறார். நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை, ஆனால் இது ஏதாவது அவசரத்தில் செய்யப்பட்டதா? என்ன அவசரம்" என்று நீதிமன்றம் கேட்டது.
அதேவேளை, அருண் கோயல் நியமனம் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்காத உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. புதிய சட்ட திருத்தத்தின்படி, புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க மத்திய சட்ட மந்திரி தலைமையில் 2 மத்திய செயலாளர்களை உள்ளடக்கிய தேடுதல் குழு அமைக்கப்படும். அந்த குழு புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க 5 பேரின் பெயர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவில் மத்திய மந்திரி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என 3 பேர் இடம்பெறுவர். தேடுதல் குழு அனுப்பி வைக்கும் பரிந்துரையான 5 பேரில் ஒருவரை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கும். தேர்வுக்குழு அனுப்பி வைக்கும் பரிந்துரையை ஏற்று அந்த நபரை தேர்தல் அதிகாரியாக குடியரசுத்தலைவர் நியமிப்பார்.
இதற்கிடையே, தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த அனுப் சந்திர பாண்டேவின் பதவிகாலம் கடந்த மாதம் 14ம் தேதி நிறைவடைந்தது. இதனால், இந்திய தேர்தல் ஆணையத்தில் முதல் 3 பதவிகளில் ஒரு பதவி காலியானதாக இருந்து வந்தது. இதையடுத்து, புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கடந்த மாதம் கூடி ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்த கூட்டத்தில் புதிய தேர்தல் ஆணையராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இதனால், இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய பதவிகளில் 2 பதவிகள் காலியாக உள்ளன. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.
தேர்தல் ஆணையர் அருண் கோயலின் பதவிக்காலம் 2027 வரை உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிகாலம் 2025ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. ராஜீவ் குமார் பணிக்காலம் நிறைவடைந்த உடன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அருண் கோயல் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க இருந்தார். ஆனால் தற்போது அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயலின் ராஜினாமா "மிகவும் கவலைக்குரியது" என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இப்போது பிரதமர், மத்திய அமைச்சரவை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
திடீர் நடவடிக்கையாக, தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்தார். மற்ற தேர்தல் ஆணையத்தின் பதவி காலியாக உள்ளது. மோடி அரசு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அங்கு பிரதமர் மோடி மற்றும் ஒரு அமைச்சரின் பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். எனவே, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், இன்று ராஜினாமா செய்த பிறகு, 3 தேர்தல் கமிஷனர்களில் 2 பேரை மோடி நியமிப்பார்என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu