பெங்களூர்லயே இருக்காதீங்க :சொந்த ஊருக்கு கிளம்புங்க..!

பெங்களூர்லயே இருக்காதீங்க :சொந்த ஊருக்கு கிளம்புங்க..!
X

தண்ணீருக்காக பெங்களூரில் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

பெங்களூர், தண்ணீர் தட்டுப்பாட்டின் உச்சத்தில் தவித்து வருகிறது. பல இடங்களில் தண்ணீருக்கு கியூ வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் பணியாறும் ஐடி பணியாளர்களை சொந்த ஊர்களுக்கே சென்று வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன. இந்தியாவின் டெக்னாலஜி ஹப்பான பெங்களூர் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்தது மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவு ஆகியவற்றால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளில் இருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இப்போது சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ. 1500 முதல் ரூ.2000 வரை விலை உயர்ந்திருக்கிறது.

விலையை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விலை ஒரு பிரச்சனையாக இருந்தாலும் கூட, டேங்கர்களை புக் செய்தால் அவை வரவே பல நாட்கள் ஆவதாக பெங்களூர் குடியிருப்பு வாசிகள் புலம்பி வருகின்றனர். ஏராளமானோர் வாரத்திற்கு ஒரு முறை தான் குளித்து வருகிறார்களாம். வெயில் காலத்தில் இந்த பிரச்சனை உடல், மன நில சிக்கல்களையும் ஏற்படுத்தும் என கவலை தெரிவிக்கிறார்கள் பெங்களூர் வாசிகள்.

தனியார் டேங்கர் லாரிகள் மூலம் புறநகர்ப் பகுதிகளில் இருந்து தண்ணீரை எடுத்து வருகின்றனர். தண்ணீர் அதிகம் சுரக்கும் போர்வெல்கள் அடையாளம் காணப்பட்டு உரிய முறையில் நீரை பகிர்ந்தளிக்க பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய போர்வெல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெங்களுருக்கு வந்து பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் பாடு பெரிய திண்டாட்டமாக மாறியுள்ளது.

அலுவலகங்களில் தண்ணீர் இல்லை. தனியார் டேங்கர் லாரிகள் மூலம் ஆர்டர் செய்தாலும் தண்ணீர் வருவதற்கு சில நாட்கள் ஆகிவிடுகிறது. இத்தகைய நிலையில் எப்படி அலுவலகம் சென்று வேலை பார்ப்பது? என்று திண்டாடி, பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ஐ.டி நிறுவனங்கள், தங்கள் ஊழியகளை வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோடைகாலம் ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருக்கும். ஆனால் தற்போதே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அடுத்தடுத்த மாதங்களில் நிலை என்னாகுமோ என பெங்களூர் வாழ் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இப்போதிருக்கும் மக்கள் அப்படியே அங்கேயே இருந்தால் அடுத்த 2 மாதங்கள் நிலைமை கடுமையாக மோசமாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஏராளமான ஐடி ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப தயாராகி வருகின்றனர். டெக்னாலஜி ஹப்பான பெங்களூர் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் அதேசமயம், தண்ணீர் தட்டுப்பாடும் ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைந்து வருவது மிகப்பெரிய தீர்வு காண வேண்டிய பிரச்சனையாக உள்ளது.

தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணங்கள் என்ன?

காவிரியின் கண்ணீர் (Cauvery)

பெங்களூருவின் குடிநீர் தேவையில் பெரும்பகுதி காவிரி ஆற்றிலிருந்தே பெறப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை காரணமாக, காவிரியின் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, பெங்களூருவுக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நீண்டகால நீர் பகிர்வு பிரச்சினையும் இந்த சிக்கலை மேலும் சிக்கலாக்குகிறது.

நிலத்தடி நீரின் நிலை (Groundwater)

மழை பெய்வது குறைவது மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மட்டத்தின் சரிவும் பெங்களூருவின் தண்ணீர் பிரச்சினையை கடுமை ஆக்கியுள்ளது. நகரமயமாக்கல் அதிகரிப்பு காரணமாக மண் தோண்டப்படுவதும், மழைநீர் சேகரிப்பு குறைவதும் நிலத்தடி நீர் மட்டம் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். இதனால், ஆழ்துளை கிணறுகள் வறண்டு போகின்றன, மக்கள் தங்கள் தினசரி தேவைகளுக்கு தண்ணீர் பெறுவது கடினமாகிவிட்டது.

நகரமயமாக்கலின் விளைவுகள் (Urbanization)

பெங்களூர் கடந்த சில தசாப்தங்களில் வேகமாக வளர்ந்துள்ளது. ஐடி துறையின் வளர்ச்சி காரணமாக, நகரம் மக்கள் தொகை பெருக்கத்தையும், கட்டுமான பணிகளின் அதிகரிப்பையும் கண்டுள்ளது. இதன் விளைவாக, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது மழைநீர் சேகரிப்பு திறனை பாதித்து, நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக, தண்ணீர் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

திட்டமிடல் குறைபாடுகள் ( Planning)

பெங்களூரு தண்ணீர் பிரச்சினையை மேலும் மோசமாக்குவது திட்டமிடல் குறைபாடுகள். நீர் விநியோக கட்டமைப்பு பழமையாகி, கசிவு பிரச்சினைகளால் தண்ணீர் வீணாகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்படவில்லை, இருக்கும் நீர்நிலைகள் பராமரிக்கப்படவில்லை. தண்ணீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself