'கருகிய ரொட்டி புடிக்குமா அப்பா..?' அப்துல் கலாம் தந்தையிடம் கேட்ட கேள்வி
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் சிறு வயதில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார்.
"நான் குழந்தையாக இருந்தபோது, ஒருநாள் என் அம்மா எங்களுக்கு உணவு சமைத்துக்கொண்டிருந்தார். அன்று அவர் நீண்ட நேரம் கடினமான வேலைக்குப் பிறகு அந்த இரவு உணவைச் செய்துகொண்டிருந்தார். ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள காய்கறி சேர்த்த கூட்டு சிறிதை அம்மா, ஒரு தட்டில் வைத்தார். பின்னர் மிகவும் கருகிப்போன ரொட்டி ஒன்றை இன்னொரு தட்டில் வைத்து என் அப்பாவின் முன் வைத்தார்.
கருகிய ரொட்டியை யாராவது கவனிக்கிறார்களா என்று நான் காத்திருந்தேன். ஆனால், அப்பா தனது ரொட்டியை சாப்பிட்டவாறு, பள்ளிக்கூடத்தில் இன்னிக்கு எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு அன்று இரவு நான் அவரிடம் என்ன பதில் சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அதே இரவு அம்மா கருகிய ரொட்டிக்காக அப்பாவிடம் மன்னிப்பு கேட்டதை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன்.அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
அதற்கு அப்பா கூறிய பதிலை என்னால் மறக்கவே முடியாது: "என்னம்மா அப்பிடி கேட்டுட்டே? எனக்கு கருகிய ரொட்டி ரொம்பப் பிடித்திருந்தது." என்றார். அம்மா மகிழ்ச்சியோடு படுக்கச்சென்றார். அன்று இரவு, நான் அப்பாவை முத்தமிடச் சென்றேன். இரவு வணக்கம் கூறிவிட்டு, 'அப்பா, உங்களுக்கு கருகிய ரொட்டி பிடிக்குமா?' என்று கேட்டேன்.
அப்போது அவர் என்னை தனது கைகளில் கட்டிப்பிடித்து,'உங்கள் அம்மா இன்று நீண்ட நேரம் ஒரு கஷ்டமான வேலை செய்தார். அதனால் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். மேலும், கருகிய ரொட்டி கடுமையான வார்த்தைகளைப் போல வேறு யாரையும் காயப்படுத்தாது.' என்றார், கண்ணை சிமிட்டியவாறு. அப்பாவின் வார்த்தைகளில் இருந்த பொருள் அப்போது புரியாவிட்டாலும் இப்போது உணரமுடிகிறது.
'மகனே, வாழ்க்கை முழுமையற்ற பொருட்களாலும், நிறைவற்ற மனிதர்களாலும் நிறைந்தது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்றார் என் அப்பா. அந்த வார்த்தைகள் பல ஆண்டுகள் கடந்தும் என் நினைவில் நிற்கிறது. "ஒருவருக்கொருவர் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். உறவுகளைக் கொண்டாடத் தெரிந்திருக்க வேண்டும்" என்பதை என் தந்தை மூலம் கற்றுக்கொண்டேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். பண்பு எங்கிருந்து அவருக்கு தொடங்கியது என்பதை நம்மாலும் உணர முடிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu