ராஜீவ்காந்தியை பந்தாடிய டெல்லி அதிகாரிகள்?
கன்னா பின்னா என ராஜீவ் காந்தியின் உடைமைகளைப் பந்தாடிக் கொண்டிருந்தார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள் டில்லி ஏர்போர்ட்டில். ராஜீவ் காந்தி, தான் வந்திருந்த விமானத்திலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார்.
1978 ல் எமர்ஜென்ஸிக்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு, ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது. அடுத்த சில நாட்களில், டெல்லி விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
எல்லோரையும் வெளியே அனுப்பி விட்ட கஸ்டம்ஸ் அதிகாரிகள், ராஜீவ் காந்தியை அத்தனை சீக்கிரத்தில் விடுவதாக இல்லை. விசாரணை என்ற பெயரில் ஏதேதோ எரிச்சலூட்டும் கேள்விகளை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அத்தனைக்கும் புன்னகை மாறாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ராஜீவ்.
அவர் கொண்டு வந்த பெட்டிகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான்களை எல்லாம் கண்டபடி வெளியே வாரி இறைத்தார்கள். அப்போதும் புன்னகை மாறாமல் அதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் ராஜிவ் காந்தி.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் எழுத்தாளரும், நடிகருமான மறைந்த பாரதிமணி. இது பற்றி அவர் எழுதிய குறிப்பினை அப்படியே தருகிறோம்.
ஃப்ராங்க்பர்ட்டிலிருந்து லுஃப்தான்ஸா விமானத்தில் தில்லி வந்து கொண்டிருந்தார் எழுத்தாளர் பாரதிமணி. அந்த விமானம், வழியில் ரோம் விமான நிலையத்தில் முக்கால் மணி நேரம் நிற்குமாம். விமானத்திலிருந்து இறங்கி புகை பிடித்து விட்டு மீண்டும் விமானத்துக்குள் ஏறியபோது, தான் பார்த்த காட்சியை சொல்கிறார் பாரதிமணி.
"என் இருக்கைக்குப் போகும் போது, ராஜீவ் காந்தியும் ரோமிலிருந்து புதுப்பயணியாக ஏறியிருந்ததைப் பார்த்தேன். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சோனியா காந்தியும் குழந்தைகளும் (ஆம், அப்போது ராகுலும், பிரியங்காவும் குழந்தைகள்!) மிலான் அருகிலிருக்கும் அவர் சொந்த ஊரிலேயே வாழ்ந்தார்கள். அவர்களைப் பார்த்து விட்டு தில்லி திரும்புகிறாரென்று நினைத்துக்கொண்டேன். அவரைத் தாண்டிச் செல்லும்போது புன்முறுவலால் வணக்கம் சொன்னேன். நீலநிற ஜீன்ஸ், ஸ்வெட்டர் போட்டிருந்தார்.
என் பாட்டி சொல்வதைப்போல ‘ரோஸ்ஸாப்பூக்கலரில்‘ ஜில் என்றிருந்தார் ராஜீவ். சிறிதுநேரம் கழித்து டாய்லெட் போகும் வழியில் அவர் என்னைக் கடந்து போகும்போது மெல்லிய புன்சிரிப்புடன் ஒரு சின்ன ‘ஹலோ‘ சொன்னார். நான் ஒரு இந்தியன் என்று என் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது போலும்.
நான் அவரிடம் வலியப்போய் பேச முயற்சிக்கவில்லை. அது எனக்கு எப்போதுமே கைவந்ததில்லை. அவர் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமராவாரென்று அப்போது எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதிகாலையில் வழக்கமான தில்லியின் பனி மூட்டத்திற்கிடையே விமானம் தரையிறங்கியது. விமானத்திலிருந்து, நிலையம் வரை செல்லும் பஸ்ஸில் சேர்ந்து பயணித்தோம். தில்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளெல்லோரும் என் நண்பர்கள்.
தில்லி ஏர்போர்ட்டில் இதுவரை என் பெட்டிகளை எந்த கஸ்டம்ஸ் அதிகாரியும் திறக்கச் சொன்னதில்லை. சோதனை முடிந்ததாக சாக்பீஸால் மார்க் பண்ணி வெளியில் வரும் முதல்பயணி நானாகத்தானிருக்கும்."
விமானத்தில் இருந்து வெளியே வந்த பாரதி மணி, வீட்டுக்குச் செல்லும் வாகனம் வருவதற்காக விமான நிலைய வரவேற்பறையில் காத்திருந்தாராம். அப்போது கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய அத்துமீறல்களையும் அட்டூழியங்களையும் பாரதி மணி சொல்கிறார்.
"அந்த விமானத்தில் வந்த அனைவரும் வெளியே போய் விட்டார்கள் ஒரே ஒருவரைத்தவிர. நாலு கவுண்ட்டர் தள்ளி ராஜீவ் காந்தியின் இரு பெரிய பெட்டிகள், கைப்பை திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான்களெல்லாம் வெளியே வாரியிறைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த சோதனை அதிகாரி பெட்டியில் இன்னும் ‘எதையோ‘ தேடிக் கொண்டிருந்தார். ஒருமணி நேர வதக்கலுக்கப்புறமும் ராஜீவின் முகத்தில் புன்னகை மாறவில்லை.
ஆபீஸர் பார்த்த சாமான்களையே திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ராஜீவ் பொறுமையாக பதிலும் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் நான் இருந்த அறையிலிருந்து கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப்பொறுக்கவில்லை. எனக்குத் தெரிந்த கஸ்டம்ஸ் அதிகாரியை அழைத்தேன். ‘என்னடா இது, இரண்டுமணி நேரமா அவர் பொட்டியிலே என்னடா தேடறீங்க, அவர் யாரு தெரியுமில்லே, முன்னாள் பிரதமரின் மகன். அவரென்ன கடத்தல்காரரா? ஏண்டா இப்படிபடுத்தறீங்க? உண்மையான கடத்தல்காரனை கண்டுக்கறதில்லே’ என்று பொரிந்து தள்ளி விட்டேன்.
அதற்கு அந்த அதிகாரி: ‘சார், எங்களுக்கும் டூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகணும். ஆனா மேலிடத்திலிருந்து ஆர்டர். குறைந்தது ரெண்டு மூணு மணி நேரமாவது அவரைத் ‘தாளித்து‘ அனுப்ப வேண்டுமென்று நார்த் பிளாக்- கிலிருந்து உத்தரவு. சார், எங்களுக்கும் மனசு கஷ்டமாகத்தானிருக்கு. ஆனா நாளைக்கு போன் வந்தா நாங்கதான் பதில் சொல்லணும்’.
இந்த அநியாயக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே கோபம் தாளவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி பொறுமையோடும் புன்னகையோடும் காத்திருந்ததை பார்த்து என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை!
எப்படி அவரால் அந்த சமயத்தில் கடுப்பின்றி சிரிக்கமுடிந்தது? உண்மையிலேயே பெரிய மனிதர் !
கடைசியில், தேவையில்லாத மூன்றுமணிநேர Torture-க்குப் பிறகு, வெளியில் வாரியிறைத்த துணிகளை மறுபடியும் பெட்டிகளில் அடைக்க முயன்று அது முடியாமல், ஒரு பெட் ஷீட்டில் தனி மூட்டையாகக் கட்டி, அதையும் சுமந்து கொண்டு, முகத்திலிருந்த புன்சிரிப்பு துளியும் மாறாமல், ஏர்போர்ட்டுக்கு வெளியே காத்திருந்த காருக்கு நடந்து போனார், பிற்காலத்தில் பிரதமராகப்போகும் அந்த முன்னாள் பிரதமரின் மகன். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வாரிசு ஒருவருக்கு நேர்ந்தால் என்னவாகும் என்று ஒருகணம் நினைத்துக் கொண்டேன்."
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu