உயில் எழுதி வைக்காத தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டு: உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
இந்து மதத்தினை சேர்ந்த ஒரு ஆண் உயில் எதுவும் எழுதி வைக்காத பட்சத்தில் அவர் தனியாக சேர்த்து வைத்த சொத்துக்கள் இதர சொத்துக்களையும் பெற அவரின் மக்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. இதன் பின் கடந்த 2005ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 6 திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி மூதாதையர்களின் சொத்தில் மகளுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், 1956 ஆம் ஆண்டு தான் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பல கட்டங்களாக விசாரித்து வந்த நிலையில் நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்து வாரிசு உரிமை சட்டப்படி, தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்தபரம்பரை சொத்தில் பங்கு பெற, வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது.
காலமான தந்தையின் சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இணை உறுப்பினர்களைவிட, இந்து வாரிசு உரிமை சட்டத்தின் கீழ், தந்தையின்நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்த வழக்கு, இந்து பெண்கள்,விதவைப் பெண்களின் சொத்துரிமையுடன் தொடர்புடையது. இறந்த தந்தை உயில் எழுதி வைக்கவில்லை என்பதற்காக, அவர்களது சொத்துரிமையை மறுக்க முடியாது. தந்தையின் சொத்து மகள்களுக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர, சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லை என்று கூறி, அதை வேறு யாருக்கும் வழங்க முடியாது. ஒரு விதவை அல்லது மகளுக்கு தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது கூட்டுச் சொத்தைபிரிப்பதன் மூலம் பெறப்பட்ட பங்கை மரபுரிமையாக பெறுவதற்கான உரிமை என்பது பழைய பாரம்பரிய இந்து சட்டத்தின் கீழ் மட்டுமல்லாது பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வாயிலாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
மேலும் உயில் எதுவும் எழுதி வைக்காமல் ஒரு இந்துப்பெண் மரணமடைந்தால், அவரது தந்தை அல்லது தாயிடமிருந்து பெற்ற சொத்து அவரது தந்தையின் வாரிசுகளுக்கு செல்லும். இதே கணவன் அல்லது மாமனாரால் பெறப்பட்ட சொத்துக்கள் கணவரின் வாரிசுகளுக்கும் செல்லும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்து விடும் நிலையில் சொத்துக்களை எவ்வாறு பிரித்து அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறையை பிரிவு 15 (2)ல் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் முடிவுகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் இப்படி விளக்கத்தினை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu