20 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு அதிரடி மாற்றம்
காட்சி படம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இம்மாதம், 14ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து வரும் ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெரிய அளவில் கடத்தல் பொருட்கள் வருவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படையினர், விமான நிலையத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் சோதனை நடத்தி, 113 பயணியரிடம் இருந்து, 13 கிலோ தங்கம், 120 ஐ போன்கள் உட்பட, 204 மொபைல் போன்கள், லேப்டாப்கள், சிகரெட் பண்டல்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ உள்ளிட்ட கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு, 14 கோடி ரூபாய்.
இதையடுத்து, கடத்தல் 'குருவி'களாக செயல்பட்ட, 113 பேர் மீதும் சுங்கத்துறை சட்ட விதிகளின்படி வழக்கு பதிவு செய்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில், சென்னை விமான நிலையத்தில், பணியில் உள்ள சிலர் உடந்தையாக இருந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில், பணியில் இருந்த, 20 சுங்கத் துறை அதிகாரிகள் கூண்டோடு தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 14ம் தேதி, சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் பணியில் இருந்த, கண்காணிப்பாளர்கள் 4 பேர், ஆய்வாளர்கள் 16 பேர் என மொத்தம், 20 பேர், ஒட்டு மொத்தமாக தலைமை அலுவலகத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த அதிரடி மாற்றம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu