கோயிலுக்குள் பசுமாட்டு தலை வீசிய 4 பேர் கைது..!

கோயிலுக்குள் பசுமாட்டு தலை  வீசிய 4 பேர் கைது..!
X

கோப்பு படம் 

மத்தியப் பிரதேச கோயிலுக்குள் பசுவின் துண்டிக்கப்பட்ட தலையினை வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குள் பசுவின் தலையை சிலர் வீசிச் சென்றனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசு இடத்தில் கட்டியிருந்த வீடுகளும் இடிக்கப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தில் பசுவதை செய்தால் தண்டனைக்குரிய குற்றம். குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆனாலும், அங்கு சிலர் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஜாவோரா என்ற இடத்தில் உள்ள கோயிலில் பசுமாட்டின் துண்டிக்கப்பட்ட தலை சில நாட்களுக்கு முன் வீசப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பசுவின் தலையை கோயிலில் தூக்கி எறிந்தது சல்மான் மேவாதி, ஷகிர் குரேஷி, நோசன் குரேஷி, ஷாருக் சத்தார் ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீஸார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

‘‘மத உணர்வை புண்படுத்தியது, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தது மற்றும் இதரக் குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்’’ என டிஐஜி மனோஜ் குமார் சிங் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளின் வீடுகள் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தன. அவற்றையும் மாவட்ட நிர்வாகத்தினர் இடித்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லா பகுதியில் உள்ள பைன் வாகி, நைன்பூர் ஆகிய பகுதிகளில் பசுவதை செய்யப்படுவதாகவும், மாட்டிறைச்சி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு இறைச்சிக்காக 150 பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள 11 பேரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது, குளிர் சாதன பெட்டியில் மாட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அரசு கால்நடை மருத்துவர் உறுதி செய்தார். அவை டிஎன்ஏ சோதனைக்காக ஹைதராபாத் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்களின் வீடுகளில் இருந்து மாட்டுத்தோல் மற்றும் எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களும் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக வீடுகள் கட்டியிருந்தனர். அந்த வீடுகளும் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட 150 பசுமாடுகள் கால்நடை பராமரிப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராஜத் சக்லெச்சா தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!