மாநில பயணங்களுக்கு ஆர்.டி.,பி.சி.ஆர் சான்று தேவையில்லை :ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு
கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரைத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா சோதனை குறித்த புதிய வழிகாட்டுதலை மாநிலங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் தற்போது, ஆர்.டி., - பி.சி.ஆர்., ட்ரூநேட், சி.பி.என்.ஏ.டி., உட்பட2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலக்கூறு சோதனை ஆய்வு மையங்கள் உள்ளன. அந்த மையங்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் செயல்பட்டு வருகின்றன.
அவ்வாறு 24 மணி நேரமும் செயல்படுவதால் ஒரு நாளின் தேசிய சோதனை திறன் 15 லட்சங்களை நெருங்கும் நிலையில் உள்ளது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகமாக டெஸ்டுகள் பரிசோதனைக்கு வருவதாலும், கொரோனாவால் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாலும் எதிர்பார்க்கப்படும் சோதனை இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பல மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களுக்குள் வரும் பயணிகளுக்கு, ஆர்.டி., - பி.சி.ஆர்., (Rapid antigen test or RT-PCR) சோதனைகளில் நெகட்டிவ் சான்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆய்வகங்களில் ஏற்படும் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான ஒருவருக்கு ஆர்.டி. - பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை என்பதை அந்த மாநிலங்கள் உணரவேண்டும்.
வேகமாக செய்யப்படும் ஆன்டிஜென் சோதனை அல்லது ஆர்.டி., - பி.சி.ஆர்., மூலம் ஒருமுறை பாஸிடிவ் ரிசல்ட் பெற்ற எந்தவொருவரிடமும் மீண்டும் அந்த சோதனை செய்யப்படக்கூடாது. அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதற்கு மாநில அரசுகள் ஆர்.ஏ.டி., டெஸ்ட்டை பயன்படுத்தலாம். இவ்வாறு ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu