அரசியல் அழுத்தத்தால் கோவாக்சினுக்கு ஒப்புதல் செய்தி தவறு: மத்திய அரசு
பைல் படம்.
அரசியல் அழுத்தத்தால் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம், அரசியல் காரணங்களால் "ஒரு சில நடைமுறைகளைத் தவிர்த்து", "மருத்துவ சோதனையை விரைவுபடுத்தியதாக" ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிக்காக நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் மூன்று கட்டங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அறிக்கைகள் முற்றிலும் முரணானது மற்றும் தவறானது.
இந்திய அரசும், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனமும் கொவிட்-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பதற்கு, அறிவியல் அணுகுமுறையையும், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றன என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துறைசார் நிபுணர் குழு 2021 ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் சந்தித்து, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவிட்- 19 தடுப்பூசியின் வரையறுக்கப்பட்ட அவசரகால ஒப்புதலுக்கான முன்மொழிவு குறித்த பரிந்துரைகளை அளித்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு நிபுணர் குழு தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையும் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மையையும் ஆய்வு செய்ததோடு, பொது மக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ சோதனை முறையில் அவசர காலத்தில் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க பரிந்துரைத்தது. பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கிய அறிவியல் தரவின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட கோவாக்சின் டோசின் மூன்றாவது கட்ட மருத்துவ சோதனையைத் தொடங்க நிபுணர் குழு அனுமதி வழங்கியது. மேலும் செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கோவாக்சினின் மருத்துவ பரிசோதனைகளில் கூறப்படும் 'அறிவியல் சாராத மாற்றங்கள்' மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, கட்டுப்பாட்டு நிறுவனத்தின் உரிய செயல்முறைக்கு இணங்கவும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுடனும் மேற்கொள்ளப்பட்டது.
இதன்பிறகு பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணம், நிபுணர் குழுவின் இடைக்கால செயல்திறன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான தரவுகளின் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி கொவிட்-19 தடுப்பூசியை 'மருத்துவ சோதனை முறையில்' வழங்குவதற்கான நிபந்தனை நீக்கப்பட்டது.
பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அவசரகால சூழலில் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்காக கோவாக்சின் உள்ளிட்ட கொவிட்- 19 தடுப்பூசிகளுக்கான அனுமதியை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துறைசார் நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தேசிய கட்டுப்பாட்டு ஆணையம் அளித்தது. நுரையீரல், நோய் எதிர்ப்பு, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தை மருத்துவம் போன்ற துறைகளின் வல்லுநர்கள் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu