வாருங்கள்... பிரக்யானந்தா வாழ்த்தி வரவேற்கிறோம்...!

வாருங்கள்... பிரக்யானந்தா  வாழ்த்தி வரவேற்கிறோம்...!
X

சர்வதேச செஸ் வீரர் பிரக்யானந்தா

பிரக்யானந்தா வெற்றியினை தவற விட்டார் என்பதில் வருத்தப்பட ஏதுமில்லை. அவரின் சாதனை மகத்தானது

இறுதிபோட்டியில் கார்ல்சனுக்கு முதல் இரு சுற்றுகளில் கடும் சவாலை கொடுத்தவருக்கு அடுத்த சுற்றில் மிகச்சிறிய சறுக்கலுடன் இரண்டாம் இடம் கிடைத்திருப்பது சாதாரணம் அல்ல. அவர் கார்சலுடன் மட்டும் மோதவில்லை. அதற்கு முன் இரு ஜாம்பவான்களை வீழ்த்தினார்.

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரரான அமெரிக்க வாழ் ஜப்பானியர் ஹிக்காரு நக்கருமாவினை வென்று, மூன்றாம் நிலை ஆட்டக்காரர் அமெரிக்கவாழ் இத்தாலியர் பாபுலோர் கவுரனா ஆகியோரை வீழ்த்தித்தான் கடைசி சுற்றுக்கு முன்னேறினார்.

அந்த வெற்றிகள் அசாத்தியமானவை. 17 வயது இந்தியர் அவர்களை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு சென்றதே மாபெரும் வெற்றி, சாதித்து விட்ட வெற்றி. உலக சாம்பியன் பட்டம் பெற கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

உலகம் அந்த அபார ஆட்டக்காரனை கைதட்டி உற்சாகபடுத்திக் கொண்டிருக்கின்றது, அடுத்த சாம்பியன் அவர் தான் அதுவரை ஓய்வெடுங்கள் என ஆரவாரத்துடன் தழுவி உற்சாகபடுத்துகின்றது. பாரத பிரதமர் மோடி அவரை உற்சாகபடுத்துகின்றார். தமிழக விளையாட்டுதுறை அமைச்சர், முதல்வர் ஆகியோர் அவர் தாயகம் திரும்பும்போது வரவேற்பார்கள் அரசின் ஊக்கநிதி வழங்குவார்கள் என்பது உறுதி.

உலகின் இரண்டாமிடம் பெற்று திரும்பும் அவருக்கு நிச்சயம் கௌரவம் வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. சினிமா இயக்குநர்களையெல்லாம் அடிக்கடி வாழ்த்தும் முதல்வர் இந்த மாபெரும் சாதனை செய்தவனை புறக்கணிக்கமாட்டார் என்பது எதிர்பார்ப்பு.

கடந்த உலககோப்பையில் அர்ஜென்டினா கோப்பையினை வென்றிருக்கலாம் .ஆனால் மக்கள் மனதில் நின்றவர் பிரான்ஸின் மாப்பே. கடைசி நேரத்தில் அடுத்தடுத்து தனி மனிதனாக கோல் அடித்து ஆட்டத்தை சமன்செய்து கடைசியில் பெனால்டியில் அவர் ஆடிய பிரான்ஸ் அணி கோப்பையினை இழந்தாலும் இன்றும் மக்கள் மனதில் அவர்தான் நிற்கின்றார்.

அந்த இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி வென்றாலும் மக்கள் மனதில் நிற்பது எம்பாவே ஆடிய அந்த அசாத்திய போராட்டம், அனல் பறந்த போராட்டம். அதுதான் பிரக்யானந்தாவுக்கும் நடந்திருக்கின்றது. அவர் தான் இப்போது உலகின் ஆட்ட நாயகன். நன்றாக நினைவிருக்கின்றது 1980களில் தன் தொடக்க கால கிரிக்கெட்டில் நடமாடும் பனைமரங்கள் நடுவில் மான் குட்டி போல அதாவது வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் குள்ள உருவத்துடன் நின்ற சச்சின் டெண்டுல்கரை மறக்க முடியாது. அவருக்கு அப்போது 17 வயதிருக்கலாம்.

சண்டமாருதம், ஊழிக்காற்று போல பந்துவீசிய வால்ஸ், அம்புரோஸ் முன் அவர் போராடினார். வால்ஷின் ஆவேச பந்தில் பந்து என்ன ஆனது என தெரியாத நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அப்போது வெஸ்ட் இண்டீஸின் ஜாம்பவான்கள் சூழ நின்று அவர் தலையினை சிரித்தபடி தடவி அனுப்பி வைத்தனர். களத்தை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றார் டெண்டுல்கர், அப்போது அச்சிறுவனின் பார்வையில் இருந்த தீர்க்கத்தை பலர் கவனித்திருக்க முடியாது. அந்த புயல் தான் பின்னாளில் திரும்பி இந்தியாவின் கிரிக்கெட் அடையாளமானது. ஆம், 17 வயது என்பது முளைவிடும் வயது அப்போதே உலகின் இரண்டாம் நிலை அதுவும் கடைசி போட்டியில் கண்ணில் விரலை விட்டு ஆட்டி போராடி விட்டு இரண்டாம் நிலை என்பது தான் மாபெரும் வெற்றி. கார்லஸ் சாம்பியனாகியிருக்கலாம். ஆனால் இனி பிரக்யானந்தாவின் முகம் அவரை தூங்கவிடாது. அதுதான் பிரக்யானந்தா பெற்றிருக்கும் அபார வெற்றி.

கொஞ்சநாள் ஓய்வுக்கு பின் அவர் உலக சாம்பியனாகட்டும் எதுவும் குறையபோவதில்லை. ஆனானபட்ட கண்ணனும் ராமனுமே பல இடங்களில் தோற்றுத்தான் பின் சாதித்தார்கள், அதாவது தோல்வி சஜகம் என்பதை அந்த அவதாரங்கள் தத்துவமாய் சொல்லிவிட்டு சென்றார்கள். பிரக்யானந்தா முதலிடம் பிடிக்கவில்லையே தவிர பெரும் ஜம்பவான்களை வீழ்த்தி இரண்டாம் இடம் பிடித்தார். அந்த ஒப்பற்ற சாதனைக்காகவே அவரை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து வரவேற்கலாம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!