மோசமான வானிலையால் சென்னை-சீரடி 2 விமானங்கள் திடீரென ரத்து: 295 பயணிகள் தவிப்பு
சென்னையிலிருந்து சீரடி செல்லும் தனியார் (ஸ்பைஜெட்) விமானம் இன்று பகல் 1.55 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாரானது.அந்த விமானத்தில் 190 பயணிகள் பயணிக்கவிருந்தனா்.அவா்கள் அனைவரும் பகல் 12.30 மணியளவில் சென்னை விமானநிலையத்திற்கு வந்துவிட்டனா்.
ஆனால் சென்னை விமானநிலையத்தில் தனியார் விமான நிறுவன அதிகாரிகள், சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவித்தனா். இதனால் பயணிகள் விமானநிலையத்தில் காத்திருந்தனா். ஆனாலும் சிறிது நேரத்தில் சீரடியில் வானிலை இன்னும் சரியாகவில்லை. எனவே விமானம் ரத்து செய்யப்படுகிறது. விமானம் நாளை சீரடிக்கு செல்லும் என்று அறிவித்தனா்.
இதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனா். சீரடிக்கு செல்பவா்கள் 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்து நெகடீவ் சான்றிதழுடன் தான் பயணிக்க வேண்டும். இந்த பயணிகளில் பலருக்கு நாளைக்கு பயணம் என்றால் டெஸ்ட் சான்றிதழ் காலாவதியாகிவிடும். புதிய டெஸ்ட் சான்றிதழ் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவா்கள் வாக்குவாதங்கள் செய்து, தங்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினா்.
விமானநிறுவனம் எங்கள் மீது தவறு எதுவும் இல்லை. மோசமான வானிலையால் விமானம் ரத்து என்று கூறிவிட்டனா். இதையடுத்து விமானநிலைய அதிகாரிகளும்,பாதுகாப்பு அதிகாரிகளும் பயணிகளை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
அதைப்போல் சீரடியிலிருந்து இன்று மாலை 5.55 மணிக்கு சென்னை வரவேண்டிய தனியார் (ஸ்பைஜெட்) பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் சென்னை வரவிருந்த 105 பயணிகளும் சீரடியில் தவித்துக்கொண்டிருக்கின்றனா்.
இன்று ஒரே நாளில் மோசமான வானிலை காரணமாக சென்னை-சீரடி-சென்னை ஆகிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 295 பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu