இந்தியா என்ற பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள்
ஜனாதிபதியாக இருந்த போது வழிபாடு நடத்த திருப்பதிக்கு வந்திருந்தார் அப்துல்கலாம். முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் எனக் கருதி எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம்.
திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள். அனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட அப்துல் கலாம், ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார். மீண்டும் அழைத்தார்கள். இன்னும் அதே இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தார்.
பின்னர் பிரதான அதிகாரியைப் பார்த்து "பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டு விட்டுத் தான் நான் ஆலயத்தில் நுழைய வேண்டும். அதுதான் உங்கள் ஆலயத்தில் தொடர்ந்துப் பின்பற்றப்படும் விதி. இந்திய ஜனாதிபதி என்றாலும் அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். எங்கே அந்தப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள். நான் கையெழுத்திட வேண்டும்." என்றார். கூடியிருந்த அனைவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர்.
'இந்தப் பண்பு வேறு யாருக்கு வரும் " என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பதிவேடு கொண்டு வந்ததும் அதில் கையெழுத்திட்ட பின்னர் "பங்காரு வாகிலி" எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்படும் திருமலையின் சிறப்பு எடுத்துரைத்து, சடாரி சார்த்தப்பட்டது.
வெளியே வந்து உண்டியலில் காணிக்கைச் செலுத்தினார். மற்ற ஆலயங்களைப் போல் திருமலையில் பெருமாளுக்குச் சார்த்திய மாலைகள் வேறு எவருக்கும் சார்த்தப்படுவதில்லை. காரணம், இந்த மலர்களும், மாலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடியப் பிறகு பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம். எனவே பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம். இதன் காரணமாக, திருப்பதிக்கு வரும் எப்பேற்பட்ட முக்கியஸ்தர் களுக்கும் சகல கவனிப்பு இருக்குமே தவிர, மாலை மரியாதை மட்டும் இருக்காது. வலம் வந்து முடித்த அப்துல் கலாமிற்கு, அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், என்றெல்லாம் பிரசாதங்களை வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.
அப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு, 'தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டாம். இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களையும் பெற வேண்டும் என்று அர்ச்சனை செய்து, வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்" என்று சொன்ன போது அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். எப்பேற்பட்ட உயரிய சிந்தனை அப்துல் கலாம் மனதுக்குள் இருந்தால் "இந்தியா" என்றப் பெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள் என்றுக் கேட்டிருப்பார்...
உள்ளவர் என்றும் உள்ளவரே...உள்ளம் உள்ளவர் யாவரும் நல்லவரே...என்ன தான் புகழின் உச்சிக்கு சென்றாலும் அகங்காரமும், ஆணவமும் இல்லாத நல்ல மனிதர் நம் அப்துல்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu