சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு
ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்த சந்திரபாபு நாயுடுவிற்கு வணக்கம் தெரிவிக்கும் உறுப்பினர்கள்
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் முத்திரை பதித்திருக்கிறார். மத்தியில் 240 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்தபோதும், தான் வென்ற 16 இடங்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை சந்திரபாபு நாயுடு காப்பாற்றினார்.
அதோடு, தனது மாநிலத்தில் தனியாக 135 இடங்களை வென்று, ஜெகன்மோகன் ரெட்டியை வெறும் 11 இடங்களுடன் மட்டுப்படுத்தி மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருக்கிறார். மேலும், மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக போட்டியிட்ட 21 இடங்களிலும் வென்ற பவன் கல்யாண், பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த பதவியேற்பு விழாவில் நான்காவது முறையாக முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், முதல்முறையாக துணை முதல்வராகப் பவன் கல்யாணும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பின்னர் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, `மீண்டும் முதல்வராகத் தான் சட்டமன்றத்துக்குள் நுழைவேன்' என்ற சபதத்தை நிறைவேற்றும் வகையில் 31 மாதங்களுக்குப் பிறகு முதல்வராக அவைக்குள் நுழைந்த சந்திரபாபு நாயுடுவை தெலுங்கு தேசம் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
குறிப்பாக, பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவை கட்டித்தழுவினார். முன்னதாக, ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது 2021 நவம்பரில் சட்டமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தனது மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதாக அவையிலிருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினார்.
அப்போது, மகாபாரதத்தில் திரௌபதி இழிவுபடுத்தப்பட்டதைக் குறிப்பிடும் வகையில், `இந்த சபை கௌரவ சபையாக மாறிவிட்டது' என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ``இனி இந்த சட்டமன்றத்துக்குள் நான் வரமாட்டேன். அப்படி வந்தால் நான் முதல்வராகத்தான் அவைக்குத் திரும்புவேன்" என்று சபதமிட்டார்.
அன்றுமுதல் இரண்டாண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைக்காத சந்திரபாபு நாயுடு, நேற்று தனது சபதத்தை நிறைவேற்றி முதல்வராக அவைக்குள் நுழைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu