பிரதமர் மோடிக்கு டெலிப்ராம்ப்டர் இல்லாமல் பேச வராது என்பது உண்மையா..?
டாவோஸ் மாநாட்டு உரையில் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சிலர் கொண்டுள்ள பல தவறான எண்ணங்கள் அவரின் புகழை கெடுப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல.
நரேந்திர மோடி ஒரு டீ விற்பவர் :
அவர் மீது தெளிக்கப்பட்டுள்ள மோசமான கருத்து இது. இந்தியா மட்டுமின்றி பிற நாட்டவரும் கொண்டுள்ள மிகப்பெரிய தவறான கருத்து இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். இதைச் சொல்வதில் சிலர் பெருமை கொள்கிறார்கள். மோடி டீ விற்றவர் என்பது உண்மை. அதை அவரே மறுக்கவில்லை. ஆனால், அவர் தனது வாழ்வாதாரத்திற்காக டீயை விற்றுவிட்டு படிப்பை நிறுத்தியவர் அல்ல. குடும்ப சூழல் காரணமாக, வாட்நகர் ரயில் நிலையம் அருகே தனது தந்தையுடன் சேர்ந்து டீ விற்றார். அது அவர் தனது தந்தையுடன் சேர்ந்து தனது குடும்பத்தின் பங்களிப்புக்காக செய்யப்பட்டது. அது பெருமைக்குரியது. அந்த வார்த்தையை பிரயோகிப்பவர்கள் அந்த வயதில் அவரின் முயற்சியையும் உழைப்பையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
15 லட்சத்தை மக்கள் கணக்கில் வரவு வைப்பது :
இன்னும் எதிர்கட்சிகளால் கேட்கப்படும் கேள்வி. இந்த கருத்தும் புரிதல் இல்லாமல் அல்லது வேண்டும் என்றே உருவாக்கப்பட்ட கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. 2013ம் ஆண்டு சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும்போது,
'இந்தியாவில் மோசடி செய்பவர்கள் அனைவரும் தங்கள் பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். இதை நான் மட்டுமல்ல உலகமே கூறுகிறது. இந்தியாவுக்கு இந்தப் பணம் வந்து சேரவேண்டுமல்லவா? இந்த பணத்தை பொதுமக்கள் மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டாமா? அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கும் 15-20 லட்சம் ரூபாய் வரை இலவசமாகக் கிடைக்கும். அவ்வளவு பணம் வெளிநாடுகளில் கருப்புப்பணமாக முடங்கிக்கிடக்கிறது.' இவ்வாறு அவர் பேசியிருந்தார். அந்த பேச்சில் மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சத்தை வரவு வைப்பேன் என்று அவர் உறுதியளிக்கவில்லை. தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்படவில்லை. ஆக இந்த கருத்தும் தவறாக திரிக்கப்பட்டதே.
மோடி தன்னை எப்போதும் உயர்ந்தவராக கட்டிக்கொள்ள விரும்புபவர். அவர் 10 லட்சத்தில் கோட், சூட் வைத்திருப்பவர் :
இதுவும் ஒரு பயனற்ற கருத்து என்றே கூறவேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சாரம். ரூ.10 லட்சம் மதிப்பிலான அந்த சூட் பிரதமர் நரேந்திரமோடி வாங்கவில்லை. அது விரானி குடும்பத்தினர் அவர்களது குடும்ப திருமணத்தின் போது நரேந்திர மோடிக்கு வழங்கிய சர்ப்ரைஸ் கிப்ட்.
பிரபல வைர நகைக் கடையின் உரிமையாளரான விரானி , அவரது குடும்ப திருமணத்தின்போது,மகன் ஸ்மித் விரானியின் சார்பில் பிரதமர் மோடிக்கு அந்த உடையை பரிசாக அளித்தார் என்று கூறப்படுகிறது. விரானி குடும்ப திருமணத்தன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திப்பதற்கான திட்டம் முடிவு செய்யப்பட்டிருந்ததால் பிரதமர் அந்த சூட்டை ஒபாமா சந்திப்பின்போது அணிந்துகொண்டார். ஒபாமாவைச் சந்தித்த பிறகு, அந்தச் சூட்டை ஏலம் விட்டு விடுவேன் என்பதையும் விரானியிடம் பிரதமர் கூறி இருந்தார்.அதையும் விரானி பின்னர் ஒருமுறை தெளிவுபடுத்தினார் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. அந்த சூட் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த நிதி பிரதமரின் நிவாரண நிதிக்கு சேர்க்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டும் சிதறிப்போனது.
நரேந்திர மோடி டெலிப்ராம்ப்டர்களின் உதவியுடன் மட்டுமே பேசுவார் :
உலகப்பொருளாதார மன்றமான 'டாவோஸ்' உச்சி மாநாட்டில் பிரதமர் உரையாற்றியது நாம் எல்லோரும் அறிந்ததே. நமது நாட்டின் தலைவர் சர்வதேச உச்சிமாநாட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது டெலிப்ராம்ப்டர் இயங்காததால் அவரது பேச்சு தடை படுகிறது. இதனை நாம் வலியோடு பார்க்கவேண்டும். நமக்கான அவமானமாக கருதவேண்டும். பிரதமர் பிடித்தவர்,பிடிக்காதவர் என்ற கருத்துக்கு இங்கு இடமில்லை. அவர் இந்திய நாட்டின் பிரதிநிதி. நம் தேசத்துக்குரியவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரது பேச்சு தடைப்பட்டதை கேலிபேசி சிரிக்கும் அவல நிலையை இந்தியாவைத்தவிர வேறெங்கும் காண முடியாது.
உலக தலைவர்களின் டெலிப்ராம்ப்டர் பயன்பாடு :
உலக நாடுகளின் பல தலைவர்கள் டெலிப்ராம்ப்டர் வைத்து பேசுவது, இந்த காலகட்டத்தில் ஒரு இயல்பான செயல். தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைத்த வரப்பிரசாதம். டிவி செய்திகள் கூட அவ்வாறுதான் வாசிக்கப்படுகிறது.
சிறந்த பேச்சாளர் :
பிரதமர் மோடி ஒரு சிறந்த மற்றும் திறந்த பேச்சாளர்.டெலிப்ராம்ப்டர் இல்லாமலேயே பேசவும் ஆற்றல் உள்ளவர். பொருளாதாரம் சார்ந்த திட்டமிடல்கள் அல்லது கோட்பாடுகளுடன் கூடிய பேச்சு என்பதால் அவர் நிதானித்து இருந்ததை தவறாக விமர்சிக்கிறார்கள். நமது நாட்டின் சுதந்திரதினம் போன்ற சிறப்பு தினங்களில் பிரதமர் மோடி பேசுவதை பார்த்திருக்கோமே. அப்போது அவர் எந்த டெலிப்ராம்ப்டர் வைத்து பேசுகிறார்? மனம் திறந்த அவரது பேச்சு ஒவ்வொன்றும் நீண்ட கால வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்கும். ஆக, அவருக்கு பேசத்தெரியாது என்பது கூட திட்டமிட்டு பரப்பப்படுவதாகவே தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu