இன்று பக்ரீத் பெருநாள்..! 'பக்ரீத்' பிறந்தது எப்படி? தெரிஞ்சுக்கங்க..! இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துகள்..!
பக்ரீத் பண்டிகை (கோப்பு படம்)
பக்ரீத் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் என்று போற்றப்படுகிறது, பக்ரீத் ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள் எனப்படும் 'பக்ரீத் பண்டிகை' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொழுகை முடிந்த பின் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது. ‘ஈத் அல்-அதா’ என்பது தியாகத் திருநாள் என்ற பொருளாகிறது.
bakrid 2023
பக்ரீத் என்பதன் பொருள் :
பக்ரீத் என்ற சொல்லில் பக்ரு என்றால் ஆடு, ஈத் என்றால் பெருநாள் என்ற உருது பொருளின் அடிப்படையில் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்களில் நல்ல வசதி படைத்தவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அது இஸ்லாமியர்களின் ஐந்தாவது கடமையாகும். பக்ரீத் பண்டிகை அன்று சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுவது இந்த நாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த பெருநாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்துகொள்கின்றனர். இதில் பலியிடல் என்பது தியாகத் திருநாளின் இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.
பக்ரீத் பெருநாளில் ‘இயன்றதை இல்லாதோருக்கு கொடுத்து உதவ வேண்டும்’ என்ற ஈகைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப பலியிட்டு (குர்பானி) அவற்றை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்றனர். குர்பானி கொடுப்பது என்பது ஒரு வணக்க வழிபாடு ஆகும். குர்பானி கொடுப்பதற்காக பிராணிகளை அறுக்கும்போது, அந்த இரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அது அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டதாகிறது. ஆதலால், நீங்கள் மனம் உவந்து குர்பானி கொடுப்பீர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்.
bakrid 2023
நபி இப்ராஹிம் அவரது காலகட்டத்தில் நடந்த கொடூர ஆட்சிக்கு எதிராக சிறிதும் அச்சமின்றி இறைக்கொள்கையை முழங்கியவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். ‘இறைவனே எல்லாமுமாவான்.அவனுக்கு இணையாக எதுவும் இல்லை’ என்ற இறைப்பற்றோடு வாழ்ந்தார். அவருக்கு, இரண்டு மனைவிகள் இருந்தனர். அவருக்கு குழந்தைகள் இல்லை.
மனம் வருந்திய நபி இப்ராஹிம், புத்திரப் பாக்யம் கிடைக்காமல் ஏங்கினார்., வருந்தினார். இறைவன் அவரது குரலுக்கு அருட்கொடையாக இப்ராஹிமின் இரண்டாவது மனைவி ஹாஜாரா அம்மையார் மூலமாக நபி இஸ்மாயில் பிறந்தார்.
கனவு
ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹிமுக்கு கனவில் தனது மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவைக் கண்டார். அந்த கனவு அவருக்கு பெரும் கவலையைத் தந்தது. அவர் கண்ட கனவை இப்ராஹிம் நபி, அவரது மகனிடம் கூறினார். இறைப்பற்றில் தந்தைக்கு இணையாக இருந்தார் இஸ்மாயில். அதனால் தன தந்தையிடம் ‘‘கனவில் வந்த இறைவானின் கட்டளையை நிறைவேற்றுங்கள், தந்தையே ’’ என்று பணிந்தார்.
‘தந்தை கொண்ட பாசத்தால் தந்தையின் மனம் மாறிவிடக் கூடாதே?’ என்ற எண்ணம்,மகன் நபி இஸ்மாயில் நெஞ்சில் நெருடலைத் தந்தது. அதற்கென ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார். தந்தையின் கண்களைத் துணியால் கட்டிவிட்டு அவரது கையில் கோடாரியையும் அவரே கொண்டுவந்து கொடுத்தார்.
மகனே கோடாரி கொடுத்த சம்பவம்
தந்தையின் கையில் வெட்டும் கோடாரி, மகன் இஸ்மாயில் கழுத்தின் மீது அந்த கூரிய கோடாரி. இறைவனின் கட்டளைப்படி மகனின் கழுத்தை வெட்ட இருந்த அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ ஒரு அசரீரி அல்லாஹ்வின் குரலாக எழுந்து நின்றது. ‘சிஃப்ரயீல்’ எனப்படும் வானவத் தூதரை அனுப்பி இறைவன் அல்லாஹ், தந்தை கொடுக்க இருந்த மகனின் ‘பலி’யை தடுத்துவிட்டார். உடனே அங்கே ஓர் ஆட்டை வைத்த இறைவன், மகன் இஸ்மாயிலுக்கு பதில் இந்த ஆட்டை அறுத்துப் பலியிடுவாயாக என்று இப்ராஹிமுக்குக் கட்டளையிட்டார். கிடைக்காது கிடைத்த வரமான மகன் நபி இஸ்மாயிலையே பலி கொடுக்கத் துணிந்த இப்ராஹிமின் தியாகத்தைப் புகழ்ந்து, ஏற்படவிருந்த நரபலியை இறைவன் அல்லாஹ் தடுத்தார். எல்லாம் அல்லாஹ்வின் அன்பு ஒன்றே காரணம்.
bakrid 2023
அந்த சம்பவத்தின் நினைவாக ஒரு ஆட்டினைப் பலியிட்டு, அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்து புசிக்குமாறு ‘இறை’ குரல் கூறியது. காலங்காலமாய்க் காத்துக் கிடந்து வருந்திப் பெற்றதோ ஒரே ஒரு பிள்ளை.அந்தப் பிள்ளையையும் இறைவனுக்குப் பலியிடத் துணிந்த தியாகத்தின் திருவுருவமாக, நபி இப்ராஹிமின் தியாகம் போற்றப்படுகிறது.
தந்தையின் உணர்வை மதித்து , தந்தையே பாசத்தால் தன்னை பலிகொடுக்க மறுத்துவிடுவாரோ ன்ற எண்ணத்தில், அதற்கான மாற்றுவழியையும் கண்ட மகன் நபி இஸ்மாயிலின் தியாகமும் போற்றப்படுகிற நாளாக ‘பக்ரீத்’ போற்றப்படுகிறது. பலியிடல், தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும்.
bakrid 2023
இறைவனின் பேரால் பலியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர்.இதில் சிறப்பாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்கவேண்டும் என்று கவனமாக பரிசீலிக்கப்படுகிறது.
இறை தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதமும் தியாகமும் நிறைந்த வாழ்வைப் போற்றும் நினைவு நாளே ‘பக்ரீத்’ பண்டிகை.
பக்ரீத் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu