பாபா சித்திக்கை கொலை செய்ய ஒரு மாதம் ஒத்திகை நடத்திய டெல்லி தாதா கும்பல்

பாபா சித்திக்கை கொலை  செய்ய ஒரு மாதம் ஒத்திகை நடத்திய டெல்லி தாதா கும்பல்
X
கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்.
மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபாசித்திக்கை கொலை செய்ய தாதா கும்பல் ஒரு மாதம் ஒத்திகை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

மும்பையில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் அவரது அலுவலகத்திற்கு வெளியே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாபா சித்திக் மீது 6 தோட்டாகள் சுடப்பட்டதில், 4 தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாபா சித்திக்கை காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் போராடினர். ஆனால் முடியவில்லை. இரவு 11.27 மணிக்குத் தான் அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். குடிசை மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான பிரச்னையில் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் பாபா சித்திக் கொலைக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் என்ற தாதா குரூப் பொறுப்பேற்றுள்ளது. "கைது செய்யப்பட்டுள்ள கர்னல் சிங் ஹரியானாவைச் சேர்ந்தவர், தர்மராஜ் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். பாபா சித்திக் சம்பவ இடத்திற்கு வருவது குறித்து கொலையாளிகளுக்கு யாரோ தகவல் கொடுத்திருக்கவேண்டும்" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், கொலைக்கு முன்பு ஒரு மாதம் ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். கொலை செய்வதற்காக மூன்று பேரும் ஆட்டோ ஒன்றில் வந்து சம்பவ இடத்தில் காத்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அதோடு அவர்கள் தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸாரிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கொலையாளிகள் துப்பாக்கியால் சுடும்போது முகத்தில் கர்ச்சீப் கட்டி இருந்தனர்.

பாபா சித்திக்கிற்கு 15 நாள்களுக்கு முன்புதான் மிரட்டல் வந்தது. ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்திடமிருந்து எந்த வித மிரட்டலும் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் அவர்கள் சொல்வதை போலீஸார் இன்னும் உறுதிபடுத்தவில்லை. பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்ற காரணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இக்கொலை குடிசை மேம்பாட்டுத்திட்டம் தொடர்பாக நடந்ததா அல்லது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் செய்தார்களா என இரண்டு கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய புலனாய்வு ஏஜென்சியும் இது குறித்து மும்பை போலீஸாரிடம் விசாரித்துள்ளது. டெல்லி மற்றும் குஜராத் போலீஸாரும் இக்கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று இரவு பாபா சித்திக் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். மற்றொரு துணை முதல்வர் அஜித்பவார் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பினார்.

லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறான். சல்மான் கானுக்கு யாரெல்லாம் நெருக்கமானவர்களோ அவர்கள் எங்களுக்கு எதிரி என்று லாரன்ஸ் பிஷ்னோயிக்கு மிகவும் நெருக்கமான ரோஹித் கோதாரா சமீபத்தில் தெரிவித்திருந்தான்.

தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தங்களது அடியாள்கள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் 700 அடியாள்கள் இருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகள் பஞ்சாப், ஹரியானா போன்ற வடமாநிலங்களில் தான் அதிகமாக இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!