சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம்..
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம்..
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு கோளரங்க திட்ட மேலாளர் பிரேரண சந்திரா கூறுகையில், “சூரியன் தொடர்பாக ஏற்கனவே மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் ஆய்வு செய்துள்ளன. இந்தியாவில் சூரிய கண்காணிப்பகம் இல்லை. ஆதித்யா எல்1 விண்கலத்துடன் சூரியனைப் பற்றிய கண்காணிப்பில் இந்தியாவும் இருக்கும். விண்வெளி வானிலை மற்றும் வரவிருக்கும் விண்வெளி பயணங்களை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும்’ என்றார்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஆதித்யா விண்கலம் எல்-1 முனை பகுதியை சென்றடைவது என்பது தொழில் நுட்ப ரீதியாக மிக சவாலானது. அதன்பின்னர், விண்கலம் அதற்கான சுற்று வட்டப்பாதையில் செல்ல வேண்டும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக மிக துல்லிய முனை பகுதிகள் தேவையாக உள்ளன. இது அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் அளிக்க கூடியது. ஏனெனில், 7 உபகரணங்கள் சூரியன் மற்றும் அதனை சுற்றி என்ன நடக்கிறது என்றும், அதன் ஆற்றல் மற்றும் பிற காரண காரியங்கள் உள்ளிட்டவற்றை பற்றி புரிந்து கொள்ளும் பணிகளை மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்த திட்டம் மிக முக்கியம் வாய்ந்தது. ஆதித்யா எல்-1 விண்கலம் ஆனது லெக்ராஞ்சியன் முனை 1 பகுதியில் நிறுத்தப்படும். இந்த முனை பகுதியில் பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை ரத்து செய்யப்படுகிறது. இதனால், குறைந்த எரிபொருளை கொண்டு, நாம் விண்கல பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாம். இதுதவிர, 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிப்பதும் சாத்தியப்படும். அந்த விண்கலத்தில் 7 உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. வளிமண்டலம், பருவநிலை மாற்றம் பற்றிய படிப்புகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பல்வேறு காரண காரியங்களை விவரிப்பதற்கு, இந்த திட்டத்தில் இருந்து கிடைக்க கூடிய தரவுகள் உதவும் என கூறியுள்ளார்.
ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தப்படுவதை நேரில் பார்ப்பதற்காக விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu