5,000 ரூபாய்க்கு மேல் UPI-ல் அனுப்புவது இனி ஈஸி இல்ல
ஆன்லைன் பண மோசடிகளை தடுக்கும் வகையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. நாள்தோறும், மிக அதிக அளவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும் அதே நேரம் இதன் மூலம் அதிக அளவிலான மோசடிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் பணிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை முழுமையாக தடுக்கும் விதமாக மத்திய அரசு ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 5000 ரூபாய்க்கு அதிகமான தொகையை தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அனுப்பும்போது குறிப்பிட்ட அந்த எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அழைப்பின் மூலமாகவோ ஒரு அலர்ட் தகவல் வழங்கப்படும். அந்த அறிவிப்பை ஏற்று அவர்கள் அங்கீகரித்தால் மட்டுமே அந்த பேமென்ட் இனி செல்லுபடியாகும் என்ற நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, யாராவது, UPI போன்றவற்றைப் பயன்படுத்தி ரூ. 5,000 மதிப்புள்ள பொருட்களை கடைகளில் வாங்கினாலோ, ஆன்லைனில் ஆர்டர் செய்தாலோ, பணப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தக் கேட்டு, தொகையை டெபிட் செய்வதற்கு முன் சரிபார்ப்பு மெசேஜ் அனுப்பப்படும் அல்லது அழைப்பு வாயிலாக உறுதிப்படுத்தச் சொல்லும்.
பொருளாதார விவகாரங்கள், வருவாய், நிதி சேவைகள் துறை அதிகாரிகள் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணைய நிதி மோசடிகளை குறைக்க இந்திய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
சர்வதேச மொபைல் சாதன ஐடெண்டி மூலம் சந்தேகத்திற்குரிய அழைப்பாளர் பட்டியலை செயல்படுத்துவது மற்றும் நுகர்வோர் எச்சரிக்கையை மேம்படுத்த ஸ்பேம் அழைப்புகளுக்கு பயனர்களை எச்சரிப்பது போன்ற மாற்று விருப்பங்களையும் அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்துடன் கலந்துரையாடல் நடந்து வருவதாகத் தெரிகிறது.
மேலும், புதிதாக யுபிஐயில் இணையும் நபர் ரூ.2000க்கும் மேல் அதிகமான தொகையை முதல்முறையாக, பெறவோ, அனுப்பவோ முடியாது என்ற விதிமுறையையும் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக ஒரு அக்கவுன்டில் இருந்து முதல் முறையாக 2 நபர்களுக்கு இடையே 2,000 ரூபாய் தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்ய 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச கால அவகாச அளவை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நான்கு மணி நேர கால அளவு யோசனையானது பெரும் சிரமத்திற்கு வழிவகுத்து, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற வளர்ச்சிக்கு எதிர்விளைவாக இருக்கும் என்பதால், மத்திய அரசு இதனைச் செயல்படுத்துவதில் யோசனையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம், 200 ரூபாய்க்கு குறைவான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பின் இல்லாமல் அனுப்பும் வாலட் வசதி உள்ள நிலையில், அதிகமான தொகை பரிவர்த்தனை செய்வதில் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு, UPI பேமெண்ட்டுகளை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வரும் சூழலில், அண்மையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு யுபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம் என அதிகபட்ச வரம்பை அதிகரித்து உத்தரவிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. அதேசமயம், ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த, மேற்கொண்ட யோசனைகளையும் ரிசர்வ் வங்கி செயல்படுத்த உள்ளதாகவும் தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu