இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சி தொடக்கம்!
புது கார் வாங்க போகிறவர்கள் எல்லாம் குழம்பிப்போய் உள்ளனர். இதற்கு மத்தியில் மத்திய அரசு GH2 திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, இதுமட்டுமா அம்பானி, டாடா, இந்தியன் ஆயில் என பெரிய பெரிய தலைகள் இத்திட்டத்தில் இறங்கியுள்ளது.
இதனால் எப்போதும் வேண்டுமானாலும் இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிய புட்சி வெடிக்க வாய்ப்புகள் உள்ளது. சொல்லப்போனால் அடுத்த பத்து வருடத்தில் பெட்ரோல், டீசல் கார்களை வாங்குவதற்குக் கூட ஆள் இல்லாமல் போகும் அளவுக்கு நிலைமை மாறலாம். அப்படி என்ன திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கு..?
கிரீன்/ கிரே ஹைட்ரஜன் (GH2) போக்குவரத்துத் துறையில் பயன்படுத்துவதற்கான அரசின் சோதனை திட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பிட்டிங் செய்துள்ளது.
கிரீன்/கிரே ஹைட்ரஜன் (GH2) பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், போக்குவரத்துத் துறையையும் டீகார்பன்ஸ் செய்வதும், புதைபடிம எரிபொருள் அதாவது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
மேலும் போக்குவரத்தின் எதிர்காலம் என போற்றப்படும் கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மற்றும் சந்தை தலைமைத்துவத்தில் உலகளவில் இந்தியா முன்னிலை பெற வழிவகுக்கும். இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம், ஹைட்ரஜன் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வேளையில், இதன் விலை குறைவாக இருக்கும், இதனால் மக்கள் பெட்ரோல், டீசலுக்காக லிட்டருக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. வெறும் 20 - 30 ரூபாயில் ஜாலியாக 20 கிலோமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் பெறும் ஹைட்ரஜன் வாகனங்களை இயக்க முடியும்.
இதைவிட சாமானிய இந்தியனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க, இந்த மாபெரும் புரட்சியின், சோதனை திட்டம் தான் இந்த GH2 திட்டம். இந்த சோதனை திட்டத்தின் மூலம் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணவும், தற்போதைய தொழில்நுட்ப தயார்நிலை, விதிமுறைகள், செயல்படுத்தும் முறைகள், கட்டமைப்பு மற்றும் விநியோக சங்கிலிகளில் உள்ள இடைவெளி பிரச்சனைகளை கண்டறியவும் உதவும்.
மத்திய அரசின் இந்த GH2 சோதனை திட்டத்தின் ரூ.496 கோடி மதிப்பிலான இந்த டெண்டர் பிப்ரவரியில் தொடங்கப்பட்டு ஏப்ரல் 4ல் நிறைவடைந்தது. இது ஜனவரி 2023 இல் ரூ.19,744 கோடி நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட நேஷ்னல் கிரீன் ஹைட்ரஜன் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
டெண்டர் வழங்குபவர்களுக்கான முக்கிய தகுதிகளில் ஒன்று, பிட்டிங் செய்யும் நிறுவனம் ஹைட்ரஜன் தயாரிப்பு, ஹைட்ரஜன் விநியோகம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களை இயக்குதல் ஆகிய முழு மதிப்பு சங்கிலியையும் உறுதி செய்வதற்காக ஒரு கூட்டு அமைப்பாகவோ அல்லது கூட்டாளிகளாகவோ பங்கேற்பது அவசியமாகும்.
அதாவது ஒரு ஹைட்ரஜன் வாகனத்தை இயக்க என்னவெல்லாம் வேண்டுமோ அனைத்தையும் ஒருங்கிணைத்த குழுவாக இருக்க வேண்டும். ஹைட்ரஜன் வாகனங்கள் முதல் ஹைட்ரஜன் எரிவாயு தயாரிப்பு, விநியோகம் வரையில் அனைத்தையும் ஒருங்கிணைத்த கூட்டணியாக இருக்க வேண்டும்.
இது தனியொரு நிறுவனத்தால் செய்ய முடியாது என்பதற்காக டாடா முதல் அம்பானி வரை பல சுவாரஸ்யமான கூட்டணிகளை உருவாக்கியுள்ளனர். அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், பேருந்து மற்றும் ட்ரக் தயாரிப்பாளர்களான அசோக் லேலண்ட் மற்றும் டைம்லர் இந்தியா ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் உடன் கூட்டாக இணைந்து பங்கேற்கிறது. அசோக் லேலண்ட் நிறுவனம் தனியாக என்.டி.பி.சி நிறுவனத்துடனும் கூட்டாக இணைந்துள்ளது.
மத்திய அரசின் GH2 சோதனை திட்டத்திற்கு பிட்டிங் செய்துள்ள பெரும் கூட்டணியில் டாடா, ரிலையன்ஸ் இடம் பெற்றுள்ளது. இந்த சோதனை திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியாவில் பெரும் புரட்சி உண்டாகும். இதேபோல் ஹைட்ரஜன் எரிவாயு மூலம் போக்குவரத்து இயக்கம் மிக குறைந்த விலையில் கிடைக்கும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களை தூக்கிப்போட வேண்டியது தான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu